இந்தியா
முதல்வர் அனுமதிக்கு காத்திருக்கும் அமைச்சர் கே.என். நேரு; சென்னையில் நடக்க இருக்கும் முக்கிய மாற்றம்

முதல்வர் அனுமதிக்கு காத்திருக்கும் அமைச்சர் கே.என். நேரு; சென்னையில் நடக்க இருக்கும் முக்கிய மாற்றம்
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில், முடிவுற்ற 17 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்து, 493 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 559 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, த.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, “சென்னை மாநகராட்சியை மேம்படுத்த இரவும் பகலமாக 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உழைத்து வருகின்றனர்.
சென்னையில் பெரும்பாலான சாலைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னையில் உள்ள பல்வேறு ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் தாழ்வான பகுதியில் தேங்கி இருந்த மழை நீர் வடிய 5 முதல் 10 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது, இரண்டு அல்லது மூன்று நாட்களில் மழை நீர் வடிகிறது. கடந்த ஆட்சியில் குடிநீர் பற்றாக்குறை இருந்தது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் தினந்தோறும் 1200 லாரிகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
நிலத்தடி நீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வாய்க்கால் பகுதிகளில் தூர்வாரப்படாத இருந்த குப்பைகள் இந்த அரசு பொறுப்பு ஏற்று தீவிர மூறையில் அகற்றப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 200 கவுன்சிலர் விட கவுன்சிலர்களை அதிகரிக்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. முதலமைச்சர் அனுமதி கொடுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள் போல் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது ஐந்து இடங்களில் புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய நான்கு மாநகராட்சிகளில் பெரிய மாநகராட்சியாக சென்னையை மாற்ற பணிகள் செய்து வருகிறோம். சிங்காரச் சென்னையை மேலும் விரிவுபடுத்த திட்டம்” என பேசினார்.