இந்தியா
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (6ம் தேதி) சென்னையில் நடைபெற்றது. இதில், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, மேனாள் நீதிபதி சந்துரு, விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் பேசியவை தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக ஆதவ் அர்ஜுனா இந்த விழாவில், “மன்னர் பரம்பரையை உருவாக்க இனி தமிழகம் ஒருபோதும், இடம் தராது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. இன்று மன்னர் பரம்பரையை ஒழிப்பதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகிறது. 2026 தேர்தலுக்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
நேரடியாக திமுக மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை வைத்து விமர்சனம் செய்தது. பெரும் பரபரப்பையும், விசிக குறித்து பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தியது. இது குறித்து பல முறை விளக்கம் அளித்த விசிக தலைவர் திருமாவளவன், தலித் அல்லாதவர் மீது நடவடிக்கை எடுக்கும் முன் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக்குழு ஆலோசனை நடத்தும். அதன் பிறகு ஒன்றுக்கு இரு முறை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று இரவு (8ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனா தற்போது கட்சியில் இருக்கிறார். நாங்கள் உயர்நிலைக்குழுவில் பேசியிருக்கிறோம். அதுபற்றிய தகவல் அவருக்கு தெரிவிக்கவில்லை. அறிவிப்பை வெளியிடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
————————————
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது… pic.twitter.com/NwHByK10XB
கடந்த சில மாதங்களுக்கு முன்பே விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “நான்கு வருடம் சினிமாவில் நடித்துவிட்டு ஒரு துணை முதல்வராக வரமுடியும் என்றால், 40 வருடமாய் அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் ஏன் துணை முதல்வராகக் கூடாது” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.