விளையாட்டு
AUS v IND | “இந்த ஸ்பீட் போதுமா” – அடிலெய்டில் சம்பவம் செய்த ஸ்டார்க்… 180 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

AUS v IND | “இந்த ஸ்பீட் போதுமா” – அடிலெய்டில் சம்பவம் செய்த ஸ்டார்க்… 180 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், அடிலெய்டில், இரவு – பகலாக நடைபெறும் பிங்க் நிற பந்து போட்டி, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, கடந்த போட்டியில் விளையாடாத ரோகித்துடன் சேர்த்து அஸ்வின் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ ஜூரெல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக போலண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆட களத்திற்கு வந்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால், மிட்செல் ஸ்டார்க்கிடம் எல்.பி.டபள்யூ முறையில் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை தொடர்ந்து, கே.எல்.ராகுலும் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த விராட் கோலி 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மன் கில்லும் 31 ரன்களில் வெளியேறினார். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை சேர்த்திருந்தது.
இதையடுத்து ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களிலும், சற்றே தாக்குப்பிடித்த பந்த் 21 ரன்களிலும், அஸ்வின் 22 ரன்களிலும் வெளியேறினர். இதன்பின் வந்தவர்களில் நிதிஷ் ரெட்டி மட்டும் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் சேர்த்தார். ஆனாலும், அவரும் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால், முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் தனது வேகப்பந்து வீச்சால் 6 விக்கெட் வீழ்த்தினார்.
முதல் டெஸ்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால், மிட்செல் ஸ்டார்க்கை பார்த்து ‘வேகம் பத்தவில்லை’ என்று கூறி ஸ்லெட்ஜ் செய்திருந்தார். இந்நிலையில், இந்தப் போட்டியில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்டார்க்கின் பௌலிங் அமைந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்க், இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேஎல் ராகுல், விராட் கோலி உட்பட 6 விக்கெட்டை வீழ்த்தினார்.