இந்தியா
TN Weather Update: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..!

TN Weather Update: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..!
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (9-12-2024) அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (9-12-2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நாளை (10-12-2024) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 11ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்கள் இன்றும் நாளையும் (10-12-2024) ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல், நாளை தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.