இந்தியா
ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் கைதிகளை வெளியில் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சிறைகளில், குற்ற வழக்குகளில் கைதான 800க்கும் மேற்பட்டவர்கள் ஜாமீன் கிடைக்கப்பெற்றும் பிணைத்தொகை செலுத்த வேண்டும் உள்ளிட்ட நீதிமன்றங்கள் விதிக்கும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாகவும் இதனால் அவர்கள் வெளியில் வர முடியாத நிலை இருப்பதாகவும் டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு, ஜாமீன் கிடைத்தும் வெளியே வர முடியாமல் சிறையில் இருக்கும் கைதிகளின் விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது.
இவ்வழக்கு மீண்டும் நேற்று (டிசம்பர் 9) விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார்.
அவர், ”தமிழகம் முழுவதும் 153 விசாரணை கைதிகளும், 22 தண்டனை கைதிகளும் ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த முடியாததால் வெளியே வர முடியாமல் உள்ளனர்.
அதோடு மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுவதாலும், கைதிகளால் விரைவில் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றி ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது” என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், “ஜாமீன் கிடைத்ததும் ஏழு நாட்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.
ஜாமீன் கிடைத்தும் 800-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கை செய்தி கூறுகிறது.
இந்த நிலையில் வெளியே வர முடியாத நிலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னணி குறித்த விவரங்களை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு மூலமாக தகவலை சேகரித்து அவர்களை ஜாமீனில் விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் மற்றும் மாநில சட்டப் பணியின் ஆணை குழு உறுப்பினர் செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கைதிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிட்ட அரசாங்க உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏற்கனவே வழங்கப்பட்ட உதவி குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் தகுதியான கைதிகள் அரசாணையின்படி திட்ட பலனை பெறுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.