இந்தியா
டங்ஸ்டன் சுரங்கம்… ஆதரித்ததா அதிமுக? – தம்பிதுரை பேசியது என்ன?

டங்ஸ்டன் சுரங்கம்… ஆதரித்ததா அதிமுக? – தம்பிதுரை பேசியது என்ன?
டங்ஸ்டன்…. இந்த வார்த்தைதான் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெரும் பேசுபொருளாகியுள்ளது. டங்ஸ்டன் கனிமமானது, வைரத்தைப் போன்று உலகின் மிகக் கடினமான கனிமங்களில் ஒன்று. இது தொழிலகங்களில் பல்வேறு வகைகளில் பயன்படுவதால் மவுசு அதிகம். அத்தகைய டங்ஸ்டனை மதுரை அரிட்டாபட்டி சுற்றுப்பகுதியில் வெட்டி எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியது. அதை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்த போதிலும், 10 மாதங்களாக தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருந்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு, சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளம்” என விமர்சித்தார்.
இதனிடையே டெல்லியில் பேட்டி அளித்த தம்பிதுரை, முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை மறுத்தார். அதில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது பொய்” என்றும், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கனிம வள ஏல நடைமுறை இல்லாததாலும், அதனை சட்டத்திருத்தம் மூலம் பாஜக அரசு கொண்டு வந்ததாலும் தான் வரவேற்றதாக” குறிப்பிட்டார்.
“திமுக ஐ.டி.விங், டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு அதிமுக உதவியாக இருந்தது என்று தவறான செய்தி பரப்புவதை சட்டப்படி எதிர்கொள்வோம்” எனவும் தம்பிதுரை கூறினார். “மதுரை மேலூரில் டங்ஸ்டன் நிறுவனத்திற்கு ஏலம் விட உரிமை தர வேண்டும் என தாம் அப்போது கூறவில்லை” எனவும் தம்பிதுரை தெளிவுப்படுத்தினார்.
இதற்கிடையே, இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரைவார்த்து ஊழல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கடந்த பாஜக ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்துபோது, கனிம வள ஊழலை தடுக்கும் ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசியிருப்பதாகவும், “தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்
“இந்தக் கனிம வள திருத்தச் சட்டம் கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக எம்.பி.க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ள ஈபிஎஸ், உண்மையை மறைத்து, தன்னைப்பற்றி தவறான தகவலை ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “அ.தி.மு.க. செய்த துரோகம், வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், மசோதாவைத்தான் ஆதரித்ததாகவும் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லைஎன்றும் தம்பிதுரை மழுப்பி இருப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.
“அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது” என்றும் “டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் . தம்பிதுரை ஆதரித்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?” என வினவியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “இனிமேலாவது அவர் உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.