இந்தியா
டங்ஸ்டன்: வேகம் காட்டும் தமிழ்நாடு அரசு.. இரவே டெல்லிக்குப் பறந்த தீர்மானம்

டங்ஸ்டன்: வேகம் காட்டும் தமிழ்நாடு அரசு.. இரவே டெல்லிக்குப் பறந்த தீர்மானம்
மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானம் கடும் விவாதத்திற்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்து பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், மதிமுக, விசிக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசினர் தீர்மானத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சுரங்கம் ஏலம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசிடம் விளக்கம் கேட்கும்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இந்த திட்டம் வந்திருக்காது” எனப் பேசினார். மேலும் இந்த சுரங்க ஏலம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் தமிழக பாஜக பேசியிருப்பதாகவும், மக்களின் விருப்பப்படி நல்ல முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சுரங்க ஏல அனுமதிக்கு மாநில அரசு எந்தவிதமான எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை” என மத்திய அரசு கூறியிருப்பதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பத்து மாத காலங்களாக திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு ஏலமே விட்டிருந்தாலும் இந்த திட்டத்தம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை செயல்படுத்த விடமாட்டேன் எனவும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் எனவும் சூளுரைத்தார்.
இதனைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்றே மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. அதேபோல், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இன்று இரவே மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஒப்புதலோடு அரசினர் தீர்மானம் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.