இந்தியா
“டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை உருவாக்கும் எந்த முடிவும் இல்லை” – அமைச்சர் ஜெய்சங்கர்

“டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை உருவாக்கும் எந்த முடிவும் இல்லை” – அமைச்சர் ஜெய்சங்கர்
அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை உருவாக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வணிகத்தில், அமெரிக்க டாலரை தவிர்த்து, புதிய கரன்சியை உருவாக்க பிரிக்ஸ் கூட்டமைப்பு முடிவு செய்தது. அமெரிக்காவின் அடுத்த அதிபராகவுள்ள டிரம்ப் பிரிக்ஸ் கரன்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். புதிய கரன்சியை பயன்படுத்தினால், அந்த நாடுகள் மீது 100 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் கத்தாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றார். அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் எந்த முயற்சியையும் இந்தியா எடுக்கவில்லை என்றும், டாலருக்கு போட்டியாக கரன்சியை பிரிக்ஸ் கூட்டமைப்பினர் உருவாக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
டிரம்ப் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோதுதான் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நட்புறவு வலுப்பெற்றதாகவும், சில வணிகம் சார்ந்த பிரச்சனை இருந்தது உண்மைதான் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.