இந்தியா
விழுப்புரம் வெள்ளம்: கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்… ஒரு ஹெக்டேருக்கான தொகை எவ்வளவு தெரியுமா..?
விழுப்புரம் வெள்ளம்: கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்… ஒரு ஹெக்டேருக்கான தொகை எவ்வளவு தெரியுமா..?
விழுப்புரம் வெள்ளம்: தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித்தொகை விவரம்..
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இதுவரை கண்டிராத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பல பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளின் விளைநிலங்கள் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால், கடந்த 30-ம் தேதி தொடங்கி இரு தினங்கள் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில், மாவட்டம் முழுவதும் 65.5 சென்டி மீட்டர் மழையளவு பதிவானது. இதனால், மாவட்டம் முழுவதும் ஆறுகள், நீர்வரத்து வாய்க்கால்களில் வெள்ளநீர் பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று கனமழை பாதிப்பில் கூரைகள் பெயர்ந்தும், சுவர்கள் இடிந்து விழுந்தும் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 506 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான 780 ஏரிகளும், 600-க்கும் மேற்பட்ட குளங்களும் முழுவதுமாக நிரம்பின.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவி தொகையை அறிவித்துள்ளது. பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.22,500 நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, எருது, பசு, கால்நடை உயிரிழப்புகளுக்கு ரூ.37,500 நிவாரணமாகவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும் கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும், மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
