விளையாட்டு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : பாயின்ட்ஸ் டேபிளில் பின்தங்கியது இந்திய அணி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : பாயின்ட்ஸ் டேபிளில் பின்தங்கியது இந்திய அணி…
ஆஸ்திரேலியா உடனான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருவதற்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி பின்தங்கியுள்ளது.
இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி மோதுமா? என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருந்தது.
இதனை தொடர்ந்து 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களும், ஆஸ்திரேலியா அணி 337 ரன்களும் எடுத்திருந்தன. 2-ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 175 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
அதைத் தொடர்ந்து 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதுவதற்கு இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும். தற்போது இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்திருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு தற்போது பின் தங்கி உள்ளது.
தற்போது முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியும், 2-ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்க அணியும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்திலும், இலங்கை 4-ஆவது இடத்திலும், இங்கிலாந்து 5-ஆவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோதும்.