இந்தியா
“தமிழக அரசின் ஒப்புதலின்றி…” – டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு சொன்னது என்ன?!

“தமிழக அரசின் ஒப்புதலின்றி…” – டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு சொன்னது என்ன?!
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியது. மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள பகுதி, பல்லுயிர் பெருக்கத் தலம் என்பதையும் மத்திய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்ததாக திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனது பார்வைக்கு வந்ததாகவும், “தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம், கவலை வேண்டாம்” என்று மத்திய அமைச்சர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.