இந்தியா
தாத்தா பகை.. பேத்திக்கு ஆதரவு.. ரஜினி – ராமதாஸ் பகை முடிவுக்கு வருகிறதா?

தாத்தா பகை.. பேத்திக்கு ஆதரவு.. ரஜினி – ராமதாஸ் பகை முடிவுக்கு வருகிறதா?
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாபா’. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முன்னதாக படத்தின் போஸ்டர்களில் ரஜினி புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இதனால் பட வெளியீட்டின் போது வட மாவட்டங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
ஜெயம்கொண்டத்தில் உள்ள ஒரு திரையரங்கின் திரை கிழிக்கப்பட்டது. ஓரிடத்தில் ‘பாபா’ படப்பெட்டியும் தூக்கிச் செல்லப்பட்டது. பெங்களூரில் நடைபெற்ற புனித் ராஜ்குமாரின் அப்பு திரைப்பட விழாவில், வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என ரஜினி பேசியதே, ‘பாபா’ படத்தை பாமக எதிர்ப்பதற்கு உண்மையான காரணம் எனவும் செய்திகள் பரவின.
இதன்பிறகு, திரைப்படங்களில் புகை மற்றும் மது அருந்தும் காட்சிகளுக்கு பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.
காலச்சக்கரம் சுழன்ற நிலையில், ராமதாஸின் பேத்தியும் அன்புமணி ராமதாஸின் மகளுமான சங்கமித்ரா ‘அலங்கு’ என்ற படத்தை ‘செல்பி’ படத்தின் தயாரிப்பாளர் சபரிஷ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இந்த படக்குழு நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து, ரஜினியை வைத்தே படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பில் ரஜினியை அறையில் இருந்து அழைத்து வந்தது முதல் ரஜினிக்கு நெருக்கமாக இருந்தது அன்புமணியின் மகள் சங்கமித்ரா. சங்கமித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி, டீசரையும் வெகுவாக பாராட்டினார்.
ரஜினியின் ‘பாபா’ படத்துக்கு தாத்தா ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரின் பேத்தி சங்கமித்ரா தயாரித்துள்ள படத்தின் டீசரை ரஜினி கையாலேயே வெளியிட வைத்தது தற்போது திரை உலகில் பேசு பொருளாகியுள்ளது.
படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் ரஜினிகாந்த் தேவையா என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால், பாமக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
ஆனால், ரஜினிகாந்த் படத்திற்கு ராமதாஸ் ஒரு காலத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.