விளையாட்டு
விளம்பரம்னா தோனிதான்… அமிதாப்பை முந்திய பின்னணி என்ன?

விளம்பரம்னா தோனிதான்… அமிதாப்பை முந்திய பின்னணி என்ன?
இந்தியாவின் முன்னணி விளம்பர தூதராக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி மாறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும், ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். சென்னை அணியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காரணமாக தோனியின் விளம்பர மதிப்பு இன்னும் குறையவில்லை.
தற்போது, இந்தியாவின் முதல் விளம்பர பிராண்டாக அவர் மாறியுள்ளார். இந்தியாவில் முதல் இடத்தில் இருந்த அமிதாப்பை பின்னுக்கு தள்ளி தோனி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் 42 பிராண்டுகளுக்கு தோனி பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். அமிதாப்பச்சன் 41 பிராண்டுகளுக்கும் ஷாருக்கான் 34 பிராண்டுகளுக்கும் அம்பாசிடராக உள்ளனர்.
டி.ஏ.எம். மீடியா வெளியிட்டுள்ள ஆய்வின்படி, பிளிப்காட் , சிட்ரியான், கருடா ஏரோஸ்பேஸ், மாஸ்டர் கார்ட்,கல்ப் ஆயில், எக்ஸ்புளோசிவ் வீ போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு தோனி விளம்பர தூதுவராக உள்ளார். ‘ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க 6 கோடியும், சோசியல் மீடியாவில் மட்டுமென்றால் 2 கோடி வரையும் தோனி கட்டணமாக பெறுகிறார். தற்போது, அவரின் சொத்து மதிப்பு 1,040 கோடியாக உள்ளது.
சர்வதேச அளவில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, கால்பந்து வீரர்கள் பீலே, மரடோனா, டேவிட் பெக்காம் கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோருக்குள்ள அதே சந்தை மதிப்பு தோனிக்கும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு இளைஞராக இருந்த தோனி முதன் முதலில் மைசூர் சாண்டல் சோப்புக்காக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தோனிக்கு பிறகு கோலி, தெண்டுல்கர், நீரஜ் சோப்ரா, பி.வி. சிந்து ஆகியோருக்கு விளம்பர சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது.
மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா?
ஆஸ்திரேலியாவின் அபார வெற்றியால் இந்தியா பின்னடைவு! மோசமான சாதனை பட்டியலில் ரோகித்