இந்தியா
New RBI Governor : வருவாய்த்துறை செயலாளர் டூ ஆர்.பி.ஐ. ஆளுநர்.. யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?

New RBI Governor : வருவாய்த்துறை செயலாளர் டூ ஆர்.பி.ஐ. ஆளுநர்.. யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறை செயலாளராக பதவி வகித்து வரும் சஞ்சய் மல்ஹோத்ரா, ஆர்.பி.ஐ.யின் அடுத்த ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து வரும் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் நாளையுடன் (டிச. 10ம் தேதி) முடிவடைகிறது. இதனையடுத்து, ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஐடி கான்பூரில் பி.எஸ்.சி. முடித்த சஞ்சய் மல்ஹோத்ரா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இதன்பிறகு ராஜஸ்தானில் கேடரில் இருந்து 1990ம் ஆண்டு பேட்ச் இந்திய குடிமையியல் பணியில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.
இந்திய குடிமையியல் பணியில் 33 வருட அனுபவம் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா, மின், நிதி, வரி, தகவல் தொழில் நுட்பம், சுரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர், நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறைச் செயலாளராக பணியாற்றிவருகிறார்.
மாநிலம் மற்றும் மத்திய அரசு என இரண்டிலும் நிதி மற்றும் வரி ஆகிய துறையில் சிறப்பாக பணியாற்றியவர் என அறியப்படுகிறார். வருவாய்த்துறை செயலாளர் பொறுப்பில், நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்புகளில் சிறப்பான பணியைச் செய்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
ஆர்.பி.ஐ. ஆளுநர் சக்திகாந்த தாஸ் நாளையுடன் (10ம் தேதி) ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து சஞ்சய் மல்ஹோத்ரா வரும் 11ம் தேதி ஆர்.பி.ஐ.யின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.
இந்தப் பதவியில் அவர் மூன்று ஆண்டு காலம் நீடிப்பார் என்று சொல்லப்படுகிறது.