சினிமா
சிரஞ்சீவி படம் முதல் சூர்யா 45 வரை… ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தமாகி விலகிய சமீபத்திய படங்கள்..

சிரஞ்சீவி படம் முதல் சூர்யா 45 வரை… ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தமாகி விலகிய சமீபத்திய படங்கள்..
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45 வது படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பார் என முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். இவ்வாறு நடைபெறுவது என்பது முதன் முறையல்ல.
இதற்கு முன்னர் சமீப காலங்களில் ஏ. ஆர். ரகுமான் ஒப்பந்தமாகி பின்னர் விலகி இருக்கிறார். அந்த படங்கள் குறித்து பார்க்கலாம்.
தெலுங்கில் வெளியான “சைரா நரசிம்ம ரெட்டி” என்ற படத்தில் ஏ. ஆர். ரகுமான் தான் முதலில் இசையமைப்பதாக இருந்தது. இந்த படத்தில் சிரஞ்சீவி முன்னணி கேரக்டரில் நடித்திருந்தார். அவருடன் அமிதாப் பச்சன், நயன்தாரா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்த படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிக படங்களில் அவர் ஒப்பந்தமாக இருந்த காரணத்தால் இந்த படத்தை அவர் தவிர்த்தார்.
இதனை தொடர்ந்து “சைரா நரசிம்ம ரெட்டி” படத்துக்கு அமித் திரிவேதி (பாடல்கள்) மற்றும் ஜூலியஸ் பாக்கியம் (பின்னணி இசை) ஆகியோர் இசையமைத்தனர். 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை சிரஞ்சீவிக்கு கொடுக்கவில்லை.
“இந்தியன் 2” – 1996 இல் வெளிவந்த “இந்தியன்” படத்தின் இரண்டாவது பாகமாக “இந்தியன் 2” உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் இசையமைக்க ஏ. ஆர். ரஹ்மானை தான் இயக்குனர் ஷங்கர் முதலில் தேர்வு செய்திருந்தார். ஆனால் அதிகமான படங்களுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வந்ததால், போதிய நேரமின்மை காரணமாக அனிருத் இந்த படத்தில் இணைந்தார். பின்னணி இசை நன்றாக அமைந்தாலும் பாடல்கள் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படமும் சுமாரான அளவு வசூல் செய்தது.
டீன்ஸ் – பார்த்திபன் இயக்கத்தில் உருவான “டீன்ஸ்” என்ற படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக ரகுமான் இந்த படத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக டி. இமான் இந்த படத்துக்கு இசையமைத்தார்.
சூர்யா 45 – ஆர். ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்துடைய ஷூட்டிங் தற்போது கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவருக்கு பதிலாக இளம் இசை அமைப்பாளர் சாய் அபிங்கார் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.