இந்தியா
“பாஜக நடவடிக்கையை தடுக்க வேண்டும்” – தேர்தல் ஆணையத்தைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்

“பாஜக நடவடிக்கையை தடுக்க வேண்டும்” – தேர்தல் ஆணையத்தைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 70 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
டெல்லியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வராக தேர்ந்தெடுத்தது. அவரது தலைமையில் அரசு நடைபெற்றுவந்தது.
மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரான மனிஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையின் உச்சத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தின் நிபந்தனையுடனான பிணையில் வெளியே வந்த அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அந்தப் பதவிக்கு டெல்லி அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சரான அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது அவர் முதல்வராக செயல்பட்டுவருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய டெல்லி சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் 2025 பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே வரும் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல்லது 2025-ம் ஆண்டு துவக்கத்தில் டெல்லிக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில், ஆம் ஆத்மி எட்டுக்கால் பாய்ச்சலில் தேர்தலுக்கான இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலையே வெளியிட்டுள்ளது.
இதற்கு இடையில், தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி நடந்து முடிந்த நாடாளுமன்றத்திலும் கூட்டணியிலேயே போட்டியிட்டது. இதனால், சட்டமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்டணி தொடரும் என பேச்சுகள் எழுந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி கிடையாது. தனித்தே போட்டியிடும் என்று அறிவித்தார்.
எனவே தற்போது டெல்லியில் மும்முனைப் போட்டி நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரு முறை ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையை ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி வருகிறது. அதேபோல், இழந்த ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் திட்டமிட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், இன்று (11-ம் தேதி) இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், ராஜீவ் குமாரை ஆம் ஆத்மி கட்சி சந்தித்துள்ளது. இந்தச் சந்திப்பில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் அதிஷி உள்ளிட்ட முக்கிய நபர்கள் இடம் பெற்றிருந்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேர்தல் ஆணையரிடம் 3000 பக்கம் கொண்ட அறிக்கையை கொடுத்துள்ளோம். அதில், டெல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை பாஜக நீக்க முயற்சிப்பது குறித்து விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக ஷஹ்தரா மாவட்டத்தில் உள்ள ஏழைகள், பட்டியலின மக்கள், தலித்கள் உள்ளிட்ட 11,000 வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க பாஜக நிர்வாகி கொடுத்துள்ள பரிந்துரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளோம்.
வாக்கு என்பது ஜனநாயகத்தில் குடிமக்களுக்கு இருக்கும் உரிமை. அதை நீக்குவது என்பது குடிமக்கள் எனும் உரிமையையே பறிப்பது. எனவே இந்த நடவடிக்கையை தடுக்கவும், இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். ஒரு பூத்தில் மட்டுமே 40 சதவீத வாக்காளர்களின் பெயர்களை நீக்க பரிந்துரைத்திருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மூன்று உத்தரவாதங்களை கொடுத்துள்ளது. அதன்படி, மொத்தமாய் வாக்காளர்களை நீக்குவது எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. வாக்காளர்கள் பெயரை நீக்க பரிந்துரைப்பவர்கள் இனி படிவம் 7-ஐ பூர்த்தி செய்யவேண்டும். வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன்பாக பூத் அலுவலர் மூலம் கள ஆய்வு செய்யப்படும். அந்த ஆய்வில் அனைத்து கட்சியினரும் இடம் பெறுவர். குறிப்பாக, ஐந்து வாக்காளர்களின் பெயருக்கு மேல் நீக்க ஒருவர் பரிந்துரைத்தால் துணை பிரிவு மாஜிஸ்திரேட் கள ஆய்வு மேற்கொள்வார். அந்த ஆய்விலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் உடன் இருப்பர் என்று உறுதி கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.