இந்தியா
Karthigai Deepam 2024: குட்டி குட்டியா… அழகு அழகான அகல் விளக்குகள் ரெடி… சூடுபிடித்த விற்பனை…

Karthigai Deepam 2024: குட்டி குட்டியா… அழகு அழகான அகல் விளக்குகள் ரெடி… சூடுபிடித்த விற்பனை…
புதுகையில் 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அழகழகான அகல் விளக்குகள்.
தெய்வங்களை தீப சொரூபத்தில் வழிபடும் மாதம் தான் இந்த கார்த்திகை மாதம். கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வது மிக சிறந்த பலன்களை தரும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மாதந்தோறும் சுப தினங்கள் பண்டிகை நாட்கள் வருகிறது, அதேபோல் தான் கார்த்திகை மாதம் என்றாலே கார்த்திகை தீப விழா.
இந்த வருடத்தின் கார்த்திகை தீபம் டிசம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கார்த்திகை மாதம் வருகிறது. இந்த நாளில் வீடுகள் மற்றும் கோவில்களில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வர்.
இதற்காகவே மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்திகை தீபத்திற்காக மண் அகல்விளக்குகளை தயார் செய்து விற்பனையும் செய்வர். கார்த்திகை தீபம் பொங்கல் போன்ற குறிப்பிட்ட நாட்களில் மட்டும் தான் இவர்களுக்கு வருமானம் இருக்கும் என்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதி, சாந்தாராம்மன் கோவில் போன்ற இடங்களில் கார்த்திகை தீப அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து பேசிய வியாபாரி, ‘‘எங்களுக்கு வருடம் முழுதும் வருமானம் இருக்காது. இது போன்ற சீசனில் மட்டும் தான் வியாபாரம் இருக்கும். அதுவும் கார்த்திகை மாதம் மழையும் வந்துவிடுகிறது. இதனால் விளக்குகளை செய்து காய வைக்க முடியாத நிலை உருவாகிவிடுகிறது. குறிப்பாக இந்த வருடம் அதிகம் விளக்குகளை செய்ய முடியவில்லை. அதனால் விழுப்புரம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம்.
அத்துடன் மண் கிடைப்பதும் எங்களுக்கு ஒரு சிரமமாக உள்ளது. அனைத்து பொருட்களும் விலை ஏறினாலும் எங்களின் இந்த மண் பாண்டங்கள் மட்டும் அதே நிலையில் தான் இருக்கு’’ என்கிறார் மண்பாண்ட தொழிலாளி. மேலும், ‘‘நாங்கள் 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விளக்குகளை விற்பனை செய்து வருகின்றோம்’’ என்றும் தெரிவிக்கின்றனர். மழை இல்லாமல் இருந்தால் வியாபாரம் கொஞ்சம் நல்லா இருக்கும் என்றும் தெரிவித்தார்.