இந்தியா
ஆணுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்… விதி மீறும் விவாகரத்து சட்டம்..? சிக்கித் தவிக்கும் குழந்தைகள்..!

ஆணுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்… விதி மீறும் விவாகரத்து சட்டம்..? சிக்கித் தவிக்கும் குழந்தைகள்..!
பெங்களூருவில் வசித்து வந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷின் மரணம் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பிரிவு 498(A) என்பதும் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஒரு பெண்ணை, அவருடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் விதிக்க சட்டப்பிரிவு 498(A) வழிவகுக்கும்.
இந்தச் சட்டப்பிரிவு தற்போது தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன. விவகாரத்தில் பெண்களைப் போல் ஆண்களும் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார்கள் என்ற பேச்சுகளும், #mentoo என்பதும்எழுந்துள்ளன.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டிருக்கும் நபர், குடும்ப நல வழக்கறிஞர், உளவியல் நிபுணர் ஆகியோரிடம் பேசினோம்.
பெயர் தெரிவிக்க விரும்பாத பாதிக்கப்பட்ட நபர் பேசும்போது, “498ஏ, குடும்ப வன்முறை உள்ளிட்ட வழக்குகளில் பெண் தரப்பிலே அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குழந்தைகளுக்குத் தங்களது தாய் தந்தையின் அன்பு முழுமையாகக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு அம்மாவிடம் இருக்கும் குழந்தை தந்தையின் அன்பையும், தந்தையிடம் இருக்கும் குழந்தை தாயின் அன்பையும் இழக்கிறது.
குழந்தை யாருடன் இருக்கிறதோ அந்தத் தரப்பினர் எதிர் தரப்பினரை மிகவும் தவறான முறையில் சித்தரிக்கிறார்கள். இதனால், குழந்தைக்கான அன்பு முழுவதும் இழக்க நேரிடுகிறது.
498ஏ புகார் வந்ததும் கணவர் மற்றும் அவரது வீட்டைச் சேர்ந்தவர்கள் யாரெல்லாம் புகாரில் இருக்கிறார்களோ அவர்களை உடனடியாகக் கைது செய்யப்படும் நடைமுறை இருந்தது. பிறகு அதில், 41ஏ நோட்டீஸ் கொடுத்து அதன் பிறகே கைது செய்ய வேண்டும் எனும் நடைமுறை வந்துள்ளது.
குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கும் குழந்தை பராமரிப்பு மையத்தில், தந்தைகளுக்குக் குழந்தையோடு நேரம் செலவழிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஷேர் பேரன்டிங் என்பது கிடைக்காது.
இதனால், குழந்தைகளுக்குத் தங்களின் தந்தையின் அன்பே கிடைக்காமலும், அதற்கு ஏங்கும் குழந்தைகளாகவும் மாறுகிறார்கள். ஷேர் பேரன்டிங் கிடைத்தால், அம்மா, அப்பா என இருவரிடமும் குழந்தைகள் இருக்கும். இருவரும் தனக்கு இருப்பதாகக் குழந்தை உணர்ந்து அதன் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேல்நாடுகளில் திருமண விவாகரத்து நடக்கிறது என்றால், ‘No Fault Divorce’ எனும் பரஸ்பர விவாகரத்து நடைமுறை உள்ளது. அதில் குழந்தையின் மீதான பொறுப்பை இருவரும் சரி சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். விவாகரத்து கொடுக்கப்பட்ட 15 நாளில் குழந்தையின் விஷயத்தில் யாருக்கு என்ன பொறுப்பு என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அதுல் வழக்கிலும் அவரிடம் குழந்தையை நெருங்கவிடாததே அவரின் இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஒருவேளை அவரிடம் குழந்தையை நெருங்கவிட்டிருந்தால், அவர் இந்த முடிவை எடுக்காமலும் இருந்திருக்கலாம்” என்றார்.
இது குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரியிடம் பேசியபோது, “சதி, கைம்பெண் திருமணம், வரதட்சணை என அனைத்தும் இங்கு நடந்துவந்ததால் தான் அதற்கு எதிரான சட்டங்கள் வந்துள்ளன. எனவே ஆண்களுக்கு ஆதரவாக சட்டங்கள் இருந்ததால், பெண்களுக்கான சட்டங்கள் வேண்டும் என சிறப்பு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றே நான் பார்க்கிறேன்.
குடும்ப நல நீதிமன்றங்களில் பார்க்கும்போது கடந்த 5 வருடங்களாக பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்களோ எனும் உணர்வு எங்களுக்கும் வருகிறது. 100 சதவீதம் பெண்கள் அனைவரும் சரி என்றோ, பெண்கள் மீது, ஆண்கள் சுட்டிக்காட்டும் அத்தனை குற்றச்சாட்டுகளும் 100 சதவீதம் உண்மை என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில், நீதிபதி சந்திரமௌலி, இன்று வரும் வரதட்சணை வழக்குகளில் 40 சதவீத வழக்குகள் போலியானதாக இருக்கிறது. எனவே புகார் பெறப்பட்டதும் ஆண்களை கைது செய்யும் நடவடிக்கை என்பது இருக்கக் கூடாது. முதலில் விசாரணை நடத்தி அதன்பிறகே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு வரதட்சணை வழக்குகளில் விசாரணை செய்தே வழக்குப் பதிவு செய்ய முடியும்.
அதுல் வழக்கில் இது மிகவும் கொடுமையானது. குழந்தைக்கு தாய், தந்தை இருவருமே உரிமையானவர்கள். குழந்தைகளை தந்தையிடம் பழகுவதற்கு அனுமதிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் சென்றால்கூட குழந்தைகளை தந்தையுடன் இருக்கவும் நேரம் செலவழிக்கவும் சொல்வார்கள். பத்திரிகை செய்திகளை பார்க்கும்போது இவர், விசிட்டிங் ரைட்ஸில் வழக்கு பதிவு செய்ததாக தெரியவில்லை. வழக்குப் பதிவு செய்திருந்தால், நிச்சயம் நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்திருக்கும்.
நிச்சயமாக தற்போது share parenting, joint custody of the children எனும் உரிமைப் போராட்டம் வந்திருக்கிறது. நீதிமன்றங்களில், முன்பு வந்த தீர்ப்புகளின் அடிப்படையில் share parenting, joint custody of the children உள்ளிட்டவை தற்போது வழங்கப்படுகின்றன. குழந்தையை பார்க்கவே முடியாவில்லை எனும் சமயத்தில் விசிட்டிங் ரைட்ஸ் போடலாம். ஆனால், பெண்கள் பராமரிப்பு தொகையை கேட்கும்போது தான், விசிட்டிங் ரைட்ஸ், joint custody of the children உள்ளிட்டவற்றை ஆண்கள் கொண்டுவருகிறார்கள்.
அதேசமயம், குழந்தையை பெற்றதாலே தனக்கு தான் குழந்தை மீது முழு உரிமையும் இருக்கிறது என சொல்லும் பெண்களையும் பார்க்கிறேன். அது முழுதும் தவறான வாதம்தான்.
பராமரிப்புத் தொகை விவகாரத்தில் இரு தரப்பையும் ஆய்வு செய்வதும் நடக்கும். இந்த வழக்கில் இரு தரப்பினர் வாதமும் முழுமையாக தெரியாது. ஆனால், முதலில் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்தோம். அதே தற்போது இறப்பு நிகழ்ந்த பிறகு அந்த ஆணின் பார்வையில் இருந்து பார்க்கிறோம். ஆனால், நீதியின் பார்வை என்று ஒன்று இருக்கிறது; அதில் இருந்து தான் பார்க்க வேண்டும். பரஸ்பர விவகாரத்து என்பது இங்கும் இருக்கிறது.
Dr. அபிலாஷா, உளவியல் நிபுணர், இது குறித்து பேசும்போது, “விவாகரத்திற்கு யாரும் எதிரானவர்கள் கிடையாது. ஆனால், அது நியாயமான, நேர்மையான காரணத்திற்காக வழங்கப்படுகிறதா எனும் கேள்வி இங்கு இருக்கிறது. இன்று விவாகரத்தால் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு.
அதேசமயம், சில நேரங்களில் பெண்கள் இதனைத் துஷ்பிரயோகம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. விவாகரத்து என்பது இருவருக்கும் ஒத்துப்போகவில்லை எனும் போது பிரிவதுதான் சரி. ஆனால், அதனையே துருப்புச் சீட்டாக உபயோகப்படுத்தி ஒருவரையொருவர் பழிவாங்கவோ அல்லது மிரட்டலுக்குப் பயன்படுத்துவதோ நியாயமில்லாத விஷயம்.
குழந்தை மீது இருவருக்குமே உரிமை இருக்கிறது. இருவருக்குமே அன்பும் இருக்கும். எனவே குழந்தையைப் பார்க்கவிட மாட்டேன் என்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. அதேபோல், நிறைய பேர் குழந்தையை அச்சுறுத்துவதற்காகவும்கூடப் பயன்படுத்துகிறார்கள். இதில் இகோ, சுயமரியாதை உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன. இதைத் தாண்டி தங்களின் உறவுகளுக்கு இது தொடர்பாகப் பதில் சொல்ல வேண்டும் எனும் போது அதுவும் அவர்களுக்கு வலியைத் தரும்.
குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும்படியாக இருக்கிறது என்றால் அங்கிருந்து குழந்தையைக் காக்கலாம். ஆனால், எந்தக் காரணமும் இன்றி குழந்தையைக் காட்டமாட்டேன் என்பவர் மீது சட்ட ரீதியாகத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரணத்திற்கு முன்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விவகாரத்திலேயே அவர் சிந்தனையை வைத்துள்ளார். அது அவருக்கு இன்னும் வெறுப்பு, விரக்தி, உச்சக்கட்ட கோபம், பழிவாங்கும் எண்ணம், உலகமே ஒரு தவறான இடம் என்பது போன்ற எண்ணங்களை அதிகரித்து அவரின் தற்கொலை சிந்தனையை அதிகரிக்கத்தான் செய்யும்.
அதிகப்படியான பரமாரிப்புத் தொகை கேட்கிறார்கள், குழந்தையைக் கண்ணில் காட்ட மறுக்கிறார்கள் என்பது அவரை இன்னும் உச்சக்கட்ட நிலைக்குக் கொண்டுபோவதுதானே அமையும்.
சிலர் செய்யும் தவறால் உண்மையில் நியாயம் கிடைக்க வேண்டிய பெண்களுக்கு நியாயம் நிராகரிக்கப்படுகிறது.
அவரின் குழந்தை தன் தந்தைப் பற்றிய இந்த விவகாரத்தை அறிந்துகொள்ளும்போது, தன் தாய் மீதும், அவரின் குடும்பத்தின் மீதோ என்னவிதமான மரியாதையை வெளிப்படுத்தும்? அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? மன ரீதியாகக் கொடுக்கப்படும் தண்டனையே அதிகபட்ச தண்டனை.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் வந்தால்,
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
ஆகியவற்றை தொடர்பு கொள்ளவும்.