நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 13/12/2024 | Edited on 13/12/2024

சிம்பு நடிப்பில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாவதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

Advertisement

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிம்பு 1 கோடி ரூபாய் உத்தரவாதமாக செலுத்த வேண்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி சிம்பு தரப்பில் 1 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. அதே சமயம் இந்த பிரச்சனை தொடர்பாக தீர்வு காண உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிம்பு தரப்பில், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால், சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட 1 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து 1 கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 ரூபாயை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.