உலகம்
சிரியாவை கட்டியெழுப்ப புதிய இடைக்கால தலைவர் உறுதி!

சிரியாவை கட்டியெழுப்ப புதிய இடைக்கால தலைவர் உறுதி!
சிரியாவில் முன்னர் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் ஆட்சி புரிந்த முஹமது அல் பஷீர் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அகதிகளாக வெளியேறிய மில்லியன் கணக்கான சிரியர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்து வருவது, அனைத்து பொதுமக்களையும் பாதுகாப்பது மற்றும் அடிப்படை சேவைகளை வழங்குவதே பிரதான இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
எனினும் போதிய அந்நியச் செலாவணி இல்லாத நிலையில் இவைகளை செயற்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘கரூவூலத்தில் சிறிய அளவிலாக சிரிய பௌண்ட்களே உள்ளது. ஒரு அமெரிக்க டொலருக்கு நிகராக எமது நாணயம் 35,000 அளவு உள்ளது’ என்று இத்தாலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
‘எம்மிடம் அந்நிய செலாவணிகள் இல்லை என்பதோடு கடன்கள் மற்றும் பிணைமுறிகள் பற்றிய தரவுகளை சேகரித்து வருகிறோம். ஆம் நாம் பொருளாதார ரீதியாக மோசமான நிலையில் இருக்கிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரிய கிளர்ச்சியாளர்கள் 12 நாட்களுக்குள் வேகமாக முன்னேறி டமஸ்கஸ் நகரை கைப்பற்றி, ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசை கவிழ்ப்பதற்கு முன்னர் வடமேற்கு சிரியாவில் சிறிய நிலப்பகுதியில் இயங்கி வந்த கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான மீட்பு அரசை பஷீர் நிர்வகித்து வந்தார்.
ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இருக்கும் அமெரிகக அதிகாரிகள், நாட்டில் தானியக்க தலைமைத்துவத்தை ஏற்கக் கூடாது என்றும் நிலைமாற்ற அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
‘புதிய அரசு சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்து, தேவைப்படும் அனைவருக்கும் மனிதாபிமான உதவியை எளிதாக்கி, பயங்கரவாதத்திற்கான தளமாக சிரியா பயன்;படுத்தப்படுவது அல்லது அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதை தடுக்கும் பொறுப்புகளை உறுதி செய்ய வேண்டும்’ என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அல் ஷாம் குழு முன்னர் சிரியாவின் அல் கொய்தா கிளையாக இயங்கிவந்த நிலையில் பின்னர் அது தனது ஜிஹாதிய பின்புலங்களை துண்டித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்ற பின்னர் தொலைக்காட்சியில் குறுகிய உரை ஒன்றை ஆற்றிய பஷீர், எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை இடைக்கால நிர்வாகத்திற்கு தலைமை வகிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது அவரின் பின்னால் இரு கொடிகள் இருந்தன. சிவில் யுத்தம் நீடித்த காலம் முழுவதும் அஸாத் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்தப்பட்ட பச்சை, கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான கொடியுடன் சிரியாவின் சுன்னி இஸ்லாமியவாத போராளிகளால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு எழுத்திலான வெள்ளை நிற கொடி வைக்கப்பட்டிருந்தது.
சிரியாவில் 13 ஆண்டுகள் நீடித்த சிவில் யுத்தத்தில் குண்டு தாக்குதல்களால் நகரங்கள் சின்னபின்னமாக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டை மீளக் கட்டியெழுப்புவது பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காசாவில் அஸாத் அரசு கவிழ்க்கப்பட்டது தொடக்கம் இஸ்ரேல் அங்கு இராணுவத் தளங்களை அழிக்கும் வகையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சிரியாவில் கடந்த 48 மணி நேரத்தில் 480 தாக்குதல்களை நடத்தியதாகவும் 15 கடற்படை கப்பல்கள், விமான எதிர்ப்பு பெட்டரிகள் மற்றும் பல நகரங்களில் இருக்கும் ஆயுத உற்பத்தித் தளங்களை அழித்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு சிரியாவில் ‘பாதுகாப்பு வலயம்’ ஒன்றை அமைக்க திட்டமிடுவதாகவும் அதனை நிரந்தர துருப்பு இன்றி செயற்படுத்தவுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
1973 மத்திய கிழக்கு போருக்கு பின்னர் அமைக்கப்பட்ட சிரியாவில் உள்ள யுத்த சூன்ய வலயத்தைத் தாண்டி சிரியாவின் சில நிலைகளை இஸ்ரேலிய துருப்புகள் கைப்பற்றியதை இஸ்ரேல் கடந்த செவ்வாயன்று ஒப்புக்கொண்டது. எனினும் சிரிய தலைநகர் டமஸ்கஸை நோக்கி முன்னேறுவதாகக் கூறப்படுவதை அது மறுத்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் வெற்றி பிராந்தியத்தில் அதிகார போக்கில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஈரான் தலைமையிலான லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராட்டக் குழுக்கள், யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பைக் கொண்ட இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை எதிர்க்கும் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.