இந்தியா
திண்டுக்கல் தீ விபத்து: லிப்டில் சிக்கி பறிபோன உயிர்கள்- நோயாளிகளை பார்க்க வந்தபோது நிகழ்ந்த சோகம்!

திண்டுக்கல் தீ விபத்து: லிப்டில் சிக்கி பறிபோன உயிர்கள்- நோயாளிகளை பார்க்க வந்தபோது நிகழ்ந்த சோகம்!
திண்டுக்கல் நகரில் உள்ள சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனையின் முதல் தளத்தில் நேற்றிரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நான்கு தளங்களைக் கொண்ட மருத்துவமனையில் மூன்று தளங்களுக்கு தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. கட்டுக்கடங்காமல் தீ பரவியதால் மருத்துவமனையின் உள்ளே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வெளியேற முடியாமல் கூக்குரல் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்குள் சிக்கியிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்களை துரிதகதியில் வெளியேற்றினர். இதில் 32 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சிகிச்சைக்காக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், திண்டுக்கல் – திருச்சி சாலை முழுவதும் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன.
இந்த தீ விபத்தில் சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த 6 பேரில் ஒருவர் தீயில் கருகியும், 5 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
மருத்துவமனையில் தீ பரவியதும் மின் விநியோகம் தடைபட்டு லிப்ட் பாதியில் நின்றதால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் பரிதவித்தனர். மருத்துவமனையில் இருந்து அனைவரும் மீட்கப்பட்ட பிறகே லிப்டில் சிலர் சிக்கியிருப்பது தெரியவந்தது. அதன்பிறகு அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
இதில், இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி, அவரது மனைவி சுப்புலட்சுமி, தாடிக்கொம்பை சேர்ந்த மாரியம்மாள், அவரது மகன் மணி முருகன், என்.ஜி.ஓ. காலனி சேர்ந்த ராஜசேகர் மற்றும் ஒரு சிறுமி உட்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அதில், ஒருவர் தீயில் கருகி இறந்த நிலையில், ஐந்து பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் நோயாளிகளுடன் இருந்தவர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, தனியார் மருத்துவமனையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார். தீ விபத்து குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, பேரிடர் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோன்று அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி, தீ விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 28 பேரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதேபோன்று அமைச்சர் சக்கரபாணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தனர்.
தீ விபத்து தொடர்பாக மருத்துவமனை மேலாளர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மருத்துவமனை கீழ் தளத்தில் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய முடியாமல் இருப்பதாகவும், வெப்பம் தணிந்த பின்னரே விசாரணை நடத்தி முழு உண்மையை அறிய முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு துறையினரின் முதல்கட்ட ஆய்வில் மருத்துவமனை வளாகத்தில் போதிய தீயணைப்பு கட்டமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தீ விபத்தினால் வெப்பம் அதிகரிப்பதை உடனடியாக தெரியப்படுத்தி அலாரத்தை இயக்கவும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் வழிவகுக்கும் கருவி இல்லாமல் இருந்ததே இவ்வளவு பெரிய விபத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருவி இருந்திருந்தால் மருத்துவமனையின் எந்த பகுதியில் தீ பிடித்திருந்தாலும் அந்த நொடியிலேயே கவனித்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்திருக்க முடியும் என்றும் தீயணைப்புத்துறையினர் கூறினர்.