இந்தியா
Weather Update: ஒரே இடத்தில் நிற்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை? – வெதர்மேன் தகவல்

Weather Update: ஒரே இடத்தில் நிற்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை? – வெதர்மேன் தகவல்
இதுதொடர்பாக ஹேமச்சந்தர் வெளியிட்ட பதிவில், “திருநெல்வேலி ஊத்து பகுதியில் 50 செ.மீ, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் 38 செ.மீ, கடலூர் மாவட்டம் கிளிமங்கலத்தில் 37 செ.மீ, தென்காசி ஆலங்குளம் 30 செ.மீ, அரியலூர் மீன்சுருட்டி 30 செ.மீ, திருநெல்வேலி நாலுமுக்கு, கோவிபட்டியில் 27 செ.மீ, திருவாரூர் பேரளம் 23 செ.மீ, மயிலாடுதுறை 22 செ.மீ என பல இடங்களில் அதித கனமழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் நிலவி வருகிறது. ஒரே இடத்தில் நின்று அதிகப்படியான ஈரப்பதக் காற்றுக் குவிதலை டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் மீது விழச்செய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடர் பலத்த மழை, பல இடங்களில் அதித கனமழையாக பதிவாகியுள்ளது.
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதித கனமழையும் பதிவாகியுள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. வடக்கு டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் அதித கனமழை பதிவானது.
இன்று (13.12.2024) நாள் முழுவதும் மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பகல் முழுதும் பரவலாக விட்டு விட்டு கனமழை எதிர்பார்க்கலாம். அவ்வப்போது பலத்த மழையாக இருக்கக்கூடும்.
அதேபோல், இன்று கொங்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் கனமழை எதிர்பார்க்கலாம்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குன்னூர், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், மாஞ்சோலை போன்ற திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப் பகுதிகள் மற்றும் அருவிகள், நீர் வீழ்ச்சிகள் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம்” என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.