Connect with us

சினிமா

சூது கவ்வும் 2: விமர்சனம்!

Published

on

Loading

சூது கவ்வும் 2: விமர்சனம்!

’மிர்ச்சி’ சிவா நடிக்கும் படங்கள் என்றாலே, தமிழ் சினிமாவை ‘ஸ்பூஃப்’ செய்கிற சில வரி வசனங்களாவது இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடத்தில் நிறைந்திருக்கிறது.

காரணம், அவரது முந்தைய படங்கள் தான். அதிலிருந்து அவர் விலகி நிற்க முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. இந்த நிலையில்தான், ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்தடுத்து பல அப்டேட்கள், டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி, இதோ இப்போது தியேட்டரில் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது.

Advertisement

சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியிருக்கிறார். ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ என்று எழுத்தாக்கத்தில் இவர் பங்களித்திருக்கிற படங்களின் எண்ணிக்கை கணிசம். மேற்சொன்ன விஷயங்களே, இப்படம் நம்மை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும். காரணம், ‘சூது கவ்வும்’ படம் தந்த அனுபவம்.

சரி, எப்படியிருக்கிறது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ படம்?!

ஒரு அமெச்சூர் திருட்டுக் கும்பலின் தலைவன் குருநாத் (சிவா). அவரிடம் எடுபிடிகளாக இருக்கிற இரண்டு அப்பாவி அல்லக்கைகள் (கல்கி & கவி).

Advertisement

மூவரும் சேர்ந்து சின்னச் சின்னதாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு, ஆயிரங்களில் பணம் கறக்கின்றனர். பெரிய கடத்தலில், பெரிய மனிதர்களோடு மோதலில் ஈடுபட இக்கும்பல் தயாராக இல்லை. காரணம், இவர்களது கொள்கைகள் அப்படி (முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கிளாஸ் எடுப்பது நினைவில் இருக்கிறதா, அதே பாயிண்ட்கள் தான்).

வங்கியில் பணம் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிச் சிறை சென்று திரும்பியவர் குருநாத். அந்த வழக்கிற்காக, அவரைக் கைது செய்யும்போது போலீஸ் அதிகாரிகளான பிரம்மாவும் (யோக் ஜேபீ) தேவநாதனும் (கராத்தே கார்த்தி) காயமடைகின்றனர். காவல் துறையில் இருந்து விலக்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில், குருநாத் கும்பலைப் பழி வாங்குகிற வாய்ப்பைப் பெறுகிறார் தேவநாதன். பிரம்மாவோ, நிதியமைச்சராக இருக்கும் அருமைப்பிரகாசத்தின் (கருணாகரன்) மோசடிகளை அம்பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.

Advertisement

அத்தனைக்கும் நடுவே, எந்தச் சம்பந்தமும் இல்லாமல் அருமைப்பிரகாசத்தைக் கடத்த முடிவெடுக்கிறார் குருநாத். காரணம், அவருக்கு மட்டுமே புலப்படுகிற ஒரு மாயப்பெண். அவரது பெயர் அம்மு (ஹரிஷா ஜெஸ்டின்). குருநாத்தின் மூளையில் ஏற்படுகிற ‘ஹாலுஷினேஷன்’ காரணமாகவே, அந்த உருவம் அவருக்குத் தென்படுகிறது. இது அவரது சிஷ்யர்களுக்கு மட்டுமே தெரியும்.

’டேவிட்டால் எப்படி கோலியாத்தை வீழ்த்த முடியும்’ என்ற நினைப்பு, சிலநேரங்களில் தவிடுபொடியாகும். அப்படித்தான், அருமைப்பிரகாசத்தைக் குருநாத் கும்பல் கடத்திச் செல்கிறது. அவர்களைத் துரத்திப் பிடிக்க பிரம்மா, தேவநாதன் இருவரும் வெறி கொண்டு திரிகின்றனர்.

இதற்கு நடுவே, அருமைப்பிரகாசம் கடத்தப்பட்ட சம்பவம் ஆட்சி மாற்றத்திற்கே காரணமாகிறது. அது எப்படி நிகழ்ந்தது? இறுதியில், இத்தனை சிக்கல்களும் என்னவாகின? இக்கேள்விகளுக்குச் சிரிக்கச் சிரிக்கப் பதிலளிக்கிறது ‘சூது கவ்வும் 2’வின் மீதிப்பாதி.

Advertisement

முதல் பாகத்தில் வந்த சில கதாபாத்திரங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள், பலவீனங்கள், சில காட்சி அமைப்புகள், திருப்பங்கள் அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அதே போன்றில்லாமல் வேறுவிதமாக இருக்கின்றன. ஆதலால், இதுவும் ‘சூது கவ்வும்’ முதல் பாகத்தின் பார்முலாவில் அமைந்த படம் எனலாம்.

’சூது கவ்வும்’ ஒரு கிளாசிக் ஆக நோக்கப்படுகிற ஒரு திரைப்படம். அதன் தாக்கம் இன்றுவரை இந்தியாவில் வெளியாகிற பல மொழி சினிமாக்களில் தென்படுகிறது. அப்படியிருக்க, அதன் இரண்டாம் பாகம் என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும்.
அதனை நன்குணர்ந்திருக்கிறது படக்குழு. அதனாலேயே, ‘சூது கவ்வும் 2 ஒரு பொழுதுபோக்கு நகைச்சுவை படம் மட்டுமே’ என்று ‘புரோமோஷன்’ நிகழ்வுகளில் சொல்லி வந்தது.

அதையும் மீறி, முதல் பாகம் போன்றே இதில் ரசிகர்களைக் கவரும் திரைக்கதை திருப்பங்கள், ஐடியாக்கள் ‘கொஞ்சமாக’ இருக்கின்றன.

Advertisement

அதேநேரத்தில், படத்தில் பெரும்பாலான காட்சிகள், வசனங்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. அந்த வகையில் ‘சிரிப்பூட்டுவதே எங்கள் நோக்கம்’ என்று இயங்கியிருக்கிறது எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் இயக்குனர் அர்ஜுன், டி.யோகராஜா இணை.

‘சூது கவ்வும்’ மாதிரியான திரைக்கதை ட்ரீட்மெண்டை கையாண்டிருந்தாலும், காட்சிகள் உண்டாக்கும் தாக்கம் வேறுமாதிரியாகத்தான் இப்படத்தில் தெரிகின்றன.
சீரியசான கதை சொல்லல் திரையில் மிளிர, படம் பார்க்கும் ரசிகர்கள் தன்னை மறந்து சிரிக்க வேண்டும். அதற்கேற்ப, பாத்திரங்களின் உணர்வுகளுக்கு, அசைவுகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது கார்த்திக் தில்லையின் ஒளிப்பதிவு.

’சூது கவ்வும்’ கதை நிகழும் காலகட்டத்திற்கு முன்னதாகத் தொடங்கி, அதன் பின்னர் தொடர்வதாக அமைந்துள்ளது திரைக்கதை. அந்த கால மாற்றத்தை உணராத அளவுக்கு, அதேநேரத்தில் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ற பின்னணியை உருவாக்கித் தந்திருக்கிறது சுரேந்திரனின் கலை வடிவமைப்பு.

Advertisement

இக்னேஷியஸ் அஸ்வின் படத்தொகுப்பானது திரையில் கதை சொல்லல் சீராக நிகழச் செய்திருக்கிறது.

அதேநேரத்தில், ’ஈயடிச்சான் காப்பி’யாக முதல் பாகம் போன்றே இரண்டாம் பாகத்திலும் ‘பிளாஷ்பேக்’ மூலமாகக் கதை முடிச்சுகள் அவிழ்க்கப்படுவது ஏற்புடையதாக இல்லை.

பின்னணி இசை அமைத்த ஹரி எஸ்.ஆர் பங்களிப்பு, திரையில் வரும் காட்சிகளைப் பார்த்து நாம் சிரித்து மகிழ்வதில் அடங்கியிருக்கிறது. எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் ஓகே ரகத்தில் உள்ளன.

Advertisement

முதல் பாகத்தில் நடித்தவர்களில் ராதாரவி, கருணாகரன், அருள்தாஸ், யோக் ஜேபீ, எம்.எஸ்.பாஸ்கர், அவரது மனைவியாக நடித்தவர், நம்பிக்கை கண்ணனாக நடித்தவர் என்று சுமார் அரை டஜனுக்கும் மேற்பட்டோர் இதிலும் தலைகாட்டியிருக்கின்றனர். அதே போன்றதொரு நடிப்பை நாம் சிரிக்கும் வண்ணம் தந்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக்செல்வன், ரமேஷ் திலக், சஞ்சிதா கூட்டணிக்குப் பதிலாக இதில் மிர்ச்சி சிவா, கல்கி, கவி, ஹரிஷா ஜெஸ்டின் நடித்துள்ளனர்.

ஹரிஷா பாத்திரம் முதல் பாகத்தில் வந்த சஞ்சிதாவைப் பிரதிபலித்தாலும், அவரது நடிப்பு எரிச்சலூட்டுவதாக இல்லை.

Advertisement

கல்கியும் கவியும் மிகச்சாதாரண பாத்திரங்களாகத் தொடக்கத்தில் தென்படுகின்றனர்; ஆனால்,  ஒருகட்டத்திற்குப் பிறகு அவர்கள் உதிர்க்கும் வசனங்கள் அனைத்தும் சிரிப்பூட்டுவதாக உள்ளன.

மிர்ச்சி சிவா இதில் குருநாத் ஆக நடித்திருக்கிறார். இதற்கு முன்னர் வந்தது போன்று தமிழ் பட நாயகர்களை ‘ஸ்பூஃப்’ செய்யாமல், கொஞ்சம் ஒரிஜினலாக நடிக்க எண்ணியிருக்கிறார். அதற்குத் திரையில் பலன் கிடைத்திருக்கிறது.

வாகை சந்திரசேகர் பாத்திரம் இப்படத்தில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறது. யோக் ஜேபீ பாத்திரத்தின் இன்னொரு பிரதிபலிப்பாக, இதில் கராத்தே கார்த்தியைக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

Advertisement

முதல் பாகத்தின் திரைக்கதையைப் போலவே, இந்தப் படத்தின் பின்பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன.

கொஞ்சம் முயன்றிருந்தால், கிச்சுகிச்சு மூட்டுவதையும் தாண்டி இதையும் ‘கிளாசிக்’ ஆக மாற்றியிருக்க முடியும். ஏனோ, அதனை வலிந்து தவிர்க்க முயன்றிருக்கிறது படக்குழு. இரண்டுக்குமான ஒப்பீடு தவறான திசையில் தள்ளக்கூடும் என்று நினைத்திருக்கலாம்.

நீரோட்டம் போன்று இயல்பானதாகத் திரைக்கதையில் காட்சிகள் இடம்பெறாதபோதும், அவற்றின் ஓட்டம் ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை. அதேநேரத்தில், வயிறு வலிக்கச் சிரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதனைச் சாதிப்பது சாதாரண விஷயமல்ல.

Advertisement

அஜித்குமாரின் ‘பில்லா’ வந்தபோது எப்படியொரு பாராட்டை இயக்குனர் விஷ்ணுவர்தன் பெற்றாரோ, கிட்டத்தட்ட அதே போன்றதொரு வரவேற்பைப் பெறத் தகுதியானவர் இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன்.

வெவ்வேறு வயதுகளில், பின்னணியில் உள்ள ரசிகர்களை ஒருசேரச் சிரிக்க வைக்கிற வித்தை வெகுசிலருக்கு மட்டுமே கைவரும். அது அவருக்கு வாய்த்திருக்கிறது என்பதை இப்படத்தின் வெற்றி சொல்லும்.

மற்றபடி, இதிலும் ‘அறம் தோற்றிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது’ என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. அதனைச் சரிக்கட்ட, ‘தர்மம் வெல்லும்’ என்று மூன்றாம் பாகம் எடுக்க வேண்டியதிருக்கும்!

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன