விளையாட்டு
மகனுக்காக வேலையை விட்ட தந்தை… குகேஷுக்கு குவியும் ‘கேஷ்’

மகனுக்காக வேலையை விட்ட தந்தை… குகேஷுக்கு குவியும் ‘கேஷ்’
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் போட்டியில் 18 வயதில் குகேஷ் சாம்பியன் ஆகியுள்ளார்.
இதையடுத்து, இந்தியா முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. குகேஷின் தந்தை ரஜினிகாந்த் டாக்டர் ஆவார்.
ஈ.என்.டி நிபுணரான அவர், மகனின் செஸ் வாழ்க்கைக்காக பணியை துறந்து மகனுடன் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். மைக்ரோ பயாலிஜிஸ்டாக பணி புரிந்த தாயார் பத்மகுமாரி வேலைக்கு போய் குடும்பத்தின் நிதிச்சுமையை தாங்கிக் கொண்டார்.
இந்த நிலையில், தான் வளர்ந்த விதம் குறித்து குகேஷ் உருக்கத்துடன் சில விஷயங்களை ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
நான் 7 வயதில் செஸ் விளையாட தொடங்கும் போதே, உலகச் சாம்பியன் ஆவதே எனது லட்சியமாக இருந்தது. எனது தந்தை எனக்காக ஏராளமான நிதி பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால், நான் அவற்றையெல்லாம் நான் உணர்ந்திருக்கவில்லை.
2017 – 18 ஆம் ஆண்டுகளில் மிகவும் மோசமான பண பிரச்னையில் சிக்கியிருந்தோம். அப்போது, எனது தந்தையின் நண்பர்கள்தான் எனக்கு ஸ்பான்ஷர் செய்தனர். என் பெற்றோரின் தியாகத்தால்தான் நான் இப்போது இந்தளவுக்கு வளர்ந்துள்ளேன். என் பெற்றோர் இருவருக்குமே ஸ்போர்ட்ஸ் ரொம்பவே பிடிக்கும். அவர்களது கனவை நான் நிறைவேற்றியுள்ளேன். எனக்கு எல்லாவிதமான ஆதரவுமாக இருந்தவர்கள் எனது பெற்றொர்தான். அவர்கள் இல்லாமல் நான் இல்லை. சிங்கப்பூர் போட்டியின் போது , என் தந்தை கூட இருந்தார். , பரிசளிப்பு விழாவுக்கு என் தாயும் வந்தது மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன் ஆனதும் முதல் பரிசாக குகேசுக்கு ரூ. 11 கோடி கிடைத்தது. தமிழக அரசு தரப்பில் 5 கோடி பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் கைது… அழுத மனைவி ; போலீசார் முன்னிலையில் என்ன செய்தார் தெரியுமா?
நெல்லைக்கு ரெட் அலர்ட்… 11 மாவட்டங்களில் கனமழை!