Connect with us

இந்தியா

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை!

Published

on

Loading

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை!

மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 15) அறிவித்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார்.

Advertisement

அவரது உடல் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவருக்கான இறுதி சடங்கு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு இன்று தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத் – சுலோசனா சம்பத் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் நேற்று இயற்கை எய்தினார்.

கடந்த 21.12.1948-இல் ஈரோட்டில் பிறந்த இவர், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார். 2004-இல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார்.

தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர்.

Advertisement

அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன