இந்தியா
ஊழலுக்கு எதிராக போராட வேண்டுமென்றால் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் – பிரதமர் மோடி

ஊழலுக்கு எதிராக போராட வேண்டுமென்றால் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் – பிரதமர் மோடி
அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து மக்களவையில் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக 11 தீர்மானங்களை முன்மொழிந்துள்ளார்.
பிரதமர் மோடி ஆற்றிய நீண்ட உரையின்போது 11 தீர்மானங்களை முன்மொழிந்த அவர், அனைவரும் சட்டத்தை பின்பற்றி, கடமையைச் செய்ய வேண்டும் எனவும், ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்றும், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலை பெறுவதுடன், பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியா முன்மாதிரியாக திகழ வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர், ஆதாயத்திற்காக அரசிலமைப்பை பயன்படுத்தக்கூடாது என்றும், அரசியலமைப்புச் சட்டப்படி இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு சமூகமும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, மத்திய, மாநில அரசுகள் கூட்டாக வளர்ச்சி பெறுவதுடன், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற குறிக்கோளுடன் பயணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதுவரை சுதந்திர தினத்தின்போது நிகழ்த்திய உரைகளின் நேரத்தைவிட பிரதமர் மோடியின் இந்த உரை, அதிக நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கடந்த சுதந்திரத்தின் போது பிரதமர் மோடி 98 நிமிடங்கள் உரையாற்றினார்.