இந்தியா
“கட்டை விரலை துரோணர் வெட்டியதைப் போன்று…” – நாடாளுமன்றத்தில் சீறிய ராகுல் காந்தி

“கட்டை விரலை துரோணர் வெட்டியதைப் போன்று…” – நாடாளுமன்றத்தில் சீறிய ராகுல் காந்தி
ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் வெட்டியதைப் போன்று ஒட்டு மொத்த இந்தியாவின் கட்டை விரலை வெட்ட மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மக்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் அரசியலமைப்பு சட்டத்திற்கு மாற்றானது மனு ஸ்மிரிதி என்பதில் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சாவர்க்கர் நம்பிக்கை கொண்டு இருந்ததாக கூறினார்.
“அரசியலமைப்பு இந்தியாவுக்கானது அல்ல என்பதே சாவர்க்கரின் சித்தாந்தம். அரசமைப்புக்கு மாற்றாக மனுஸ்மிருதியை தூக்கிப் பிடித்தவர் சாவர்க்கர். சாவர்க்கரை தலைவராக ஏற்றுள்ள பாஜக, அரசியலமைப்பை பாதுகாப்பதாக கூறுவது, தங்கள் கட்சித் தலைவரின் கொள்கைகளையே அவமதிப்பது போல் இருக்கிறது” என கூறினார்.
மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் குருதட்சணையாக ஏகலைவனிடம் கட்டை விரலை கேட்டதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பாஜக அரசு தற்போதைய இளைஞர்களின் எண்ணங்களுக்கு முடுக்கட்டை போடுவதாக ராகுல் தெரிவித்தார். தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு தாரை வார்த்ததன் மூலம் அப்பகுதியில் இருந்த தொழில் முனைவோர்களின் கட்டை விரல் வெட்டப்பட்டிருப்பதாகவும் ராகுல் விமர்சித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, தனது எக்ஸ் தள பக்கத்தில், இந்திரா காந்தி சாவர்க்கர் குறித்து எழுதிய கடிதத்தை பகிர்ந்துள்ளார். சாவர்க்கரின் பிறந்தநாளன்று இந்திரா காந்தி எழுதிய அக்கடிதத்தில், சாவர்க்கரை ‘இந்தியாவின் குறிப்பிடத்தக்க மகனான சாவர்க்கர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.