இந்தியா
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு : தனித்தீவான புன்னைக் காயல்… ஆண்டுகள் கடந்தும் மாறாத துயரம்!

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு : தனித்தீவான புன்னைக் காயல்… ஆண்டுகள் கடந்தும் மாறாத துயரம்!
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியான புன்னைக்காயல் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் எதிரொலியாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அதிக அளவு மழை நீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.
இதனால், தாமிரபரணி ஆற்றில் சுமார் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கரைபுரண்டோடி வரும் தாமிரபரணி வங்கக்கடலில் 7 ஆறாக பிரிந்து புன்னக்காயல் பகுதியில் தான் கடலில் கலக்கிறது.
இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், வீடுகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்ததால், தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பாதுக்காப்பான இடம் தேடி அலையும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் புன்னைக்காயலுக்கு செல்லும் சாலையில் முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தீவுப்போல் காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தாமிரபரணியில் தண்ணீர் திறந்துவிடும்போதெல்லாம் பாதிக்கப்படும் முக்கிய பகுதியாக புன்னக்காயல் உள்ளது. ஆனால் இதிலிருந்து தங்களை காப்பாற்ற அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே அக்கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.