இந்தியா
பெட்ரோல் பங்கில் திருடுவதற்கு முன் திருடன் செய்த காரியம்..! சிரிப்பை மூட்டிய வீடியோ

பெட்ரோல் பங்கில் திருடுவதற்கு முன் திருடன் செய்த காரியம்..! சிரிப்பை மூட்டிய வீடியோ
மத்திய பிரதேச மாநிலம் ஜீராபூர் – மச்சல்பூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அசாதாரண சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் ஆளில்லாத நேரத்தில் திருடுவதற்காக நுழைந்த திருடன் ஒருவன், தான் வந்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று அங்கிருந்த சாமி படங்களை தலை குனிந்து பின் கையெடுத்து தொட்டு கும்பிட்டு பிரார்த்தனை செய்யும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
பெட்ரோல் பங்க்கின் அலுவலக அறையில் நுழைந்ததும் கடவுளை கும்பிட்டு தனது தொழிலை பயபக்தியுடன் துவக்கிய திருடன் திருடிச் சென்ற ரொக்க பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.1.6 லட்சம் ஆகும். சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோ கிளிப்பின் கேப்ஷனில், “திருடுவதற்கு முன் கடவுளிடம் ஆசிர்வாதம் வாங்கிய திருடன். மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பம்ப் அலுவலகத்தில் ஒரு திருடன் புகுந்து சுமார் 1.6 லட்சத்தை திருடிச் சென்றான்” என குறிப்பிடப்படுள்ளது.
சிசிடிவி-யில் பதிவான காட்சிகளில் முகமூடி அணிந்த நபர் பெட்ரோல் பம்ப் அலுவலகத்திற்குள் கதவை திறந்து பதுங்கி பதுங்கி வருவது பதிவாகியுள்ளது. அலுவலகத்திற்குள் நுழைந்ததும் இடது புறம் கடவுள்களின் ஃபோட்டோக்கள் வைக்கப்பட்ட பூஜை செய்யும் இடத்தை பார்த்ததும் தாமதிக்காமல் அவற்றை நோக்கி நடந்து சென்று தலைகுனிந்து கையெடுத்து கும்பிட்டு சில வினாடிகள் பிரார்த்தனை செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் அடங்கி இருக்கின்றன.
பின் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருக்கும் பணத்தை திருட பூட்டி இருக்கும் சில டிராக்களை நோட்டமிடுகிறார். அப்போது தன்னை நோக்கி இருக்கும் சிசிடிவி கேமராவை பார்க்கிறார். பின்னர் அந்த கேமராவை ஒரு நாற்காலியில் ஏறி உடைக்க முயன்றார், ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்ததால் கீழே இறங்கி, மீண்டும் தனது கவனத்தை பூட்டி இருக்கும் டேபிள் டிராயர்களின் பக்கம் திருப்புகிறார். இந்த காட்சிகளே வைரல் வீடியோவில் பதிவாகி உள்ளன.
இதனிடையே திருடனை பிடிக்க ஊழியர்கள் முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. திருடனின் செயல்களை கேமராவில் பார்த்தவர்கள் தங்களையும் அறியாமல் சிரித்தனர். இதன் பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
चोरी करने से पहले भगवान से लिया आशीर्वाद : Madhya Pradesh में Rajgarh जिले में एक चोर ने एक पेट्रोल पंप के कार्यालय में घुसकर लगभग 1.6 लाख रूपए चुराए #viralvideo #MadhyaPradesh #MPNews pic.twitter.com/KJcUyq48yz
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ள உள்ளூர் போலீசார் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு 1 மணியளவில் கொள்ளை நடந்ததாகவும், பெட்ரோல் பங்கில் இருந்த சுமார் ரூ.1.6 லட்சத்தை வைரல் வீடியோவில் இருக்கும் திருடன் திருடிச் சென்று உள்ளதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.