இலங்கை
போர்க்களமாக மாறிய தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்!

போர்க்களமாக மாறிய தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தொடர முடியாது என்று வலியுறுத்தி நேற்றைய கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதையடுத்து, மாவை சேனாதிராஜாவின் தலைமைப் பதவிக்காக வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று மாலை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பிக்கும் தருணத்தில் மாவை சேனாதிராஜா சபையில் இருக்கவில்லை.
‘மாவை சேனாதிராஜா வருகைதராமல் கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டாம்’ என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவமோகன் தெரிவித்திருந்தார். இதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ‘மாவை சேனாதிராஜா வரும் வரைக்கும் காத்திருக்க முடியாது. உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்’ என்று கூறினார். இதையடுத்து கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
கூட்டத்தின் கணிசனமான நேரம் மாவையின் தலைமைப் பதவி தொடர்பிலேயே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில் இந்த விடயத்தை வாக்கெடுப்பில் தீர்மானிப்பது என்றும், இதற்காக எதிர்வரும் டிசெம்பர் 28 ஆம் திகதி மத்தியகுழுக் கூட்டத்தைக் கூட்டுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.