விளையாட்டு
ரோஹித் சர்மா கோபம்.. ஜெய்ஸ்வால் இல்லாமல் புறப்பட்ட டீம் பஸ்.. அடிலெய்டில் நடந்தது என்ன?

ரோஹித் சர்மா கோபம்.. ஜெய்ஸ்வால் இல்லாமல் புறப்பட்ட டீம் பஸ்.. அடிலெய்டில் நடந்தது என்ன?
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. தற்போது பிரிஸ்பேனில் நடக்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. முன்னதாக, அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேன் செல்வதற்காக கிளம்பிய இந்திய அணியின் டீம் பஸ்ஸில் இளம் வீரரும் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனுமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பயணிக்கவில்லை.
இதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது. அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேன் செல்வதற்காக இந்திய வீரர்கள் தயாராக இருந்துள்ளனர். அவர்களுடன் பயிற்சியாளர்கள், அணியின் உதவியாளர்களும் தயாராக இருந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் அவர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களும் பேருந்தில் ஏறிய பின்னும், இளம் வீரர் ஜெய்ஸ்வால் வரவில்லை என்று கூறப்படுகிறது.
பேருந்தில் சிறிது நேரம் அனைவரும் காத்திருந்த நிலையில், ஜெய்ஸ்வால் ஹோட்டல் லாபிக்கு சரியான நேரத்தில் வரத் தவறியதாகவும், இதில் ரோஹித் சர்மா கோபம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகே ஜெய்ஸ்வால் இல்லாமல் பேருந்து புறப்பட்டுள்ளது. இதன்பின், 20 நிமிடங்களுக்கு மேலான பிறகு ஹோட்டலின் லாபிக்கு வந்த ஜெய்ஸ்வால் அணியினர் புறப்பட்டு சென்றதை கண்டுள்ளார்.
எனினும், ஜெய்ஸ்வாலுக்காக பாதுகாவலர்கள் அடங்கிய காரை இந்திய அணி ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஏறி, விமான நிலையம் சென்று அணியினர் உடன் அவர் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.