இந்தியா
“வெற்றிக் கூட்டணியை ஸ்டாலின் அமைத்துக் கொடுப்பார்” – பொதுக்குழுவில் பொங்கிய சிவி சண்முகம்

“வெற்றிக் கூட்டணியை ஸ்டாலின் அமைத்துக் கொடுப்பார்” – பொதுக்குழுவில் பொங்கிய சிவி சண்முகம்
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கான வெற்றிக் கூட்டணியை ஸ்டாலினே அமைத்துக் கொடுப்பார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியபோது “கடந்த ஏழரை ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை அதிமுக சந்தித்திருக்கிறது. ஆனால், எந்தவித சேதாரமும் இல்லாமல் அதிமுக எஃகு கோட்டையாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஆளுமை மிக்க எடப்பாடி பழனிசாமி தான்.
அதிமுகவை தோற்கடிப்பதற்கு எவரும் கிடையாது. நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கை தான் நம்முடைய வெற்றிக்கு முதல் படி. நம்முடைய நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் மறைமுகமாக தாக்குதல் நடத்துகிறார்கள். அதை நாம் ஓரம்கட்ட வேண்டும்.
நம்முடைய பலம் திமுகவுக்கு தெரியும். கடைசி தொண்டன் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதனால் அதிமுக தொண்டர்களின் மனதை சோர்வடைய வைக்க வேண்டும் என்பதற்காகவே தவறான செய்திகளை ஊடகங்களில் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 2001 சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கூட்டணி அமையவில்லை. தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் கூட்டணி அமைந்தது. அந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம்.
2011 தேர்தலிலும் கூட்டணி அமையவில்லை. தேர்தல் தேதி அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு தான் கூட்டணி அமைந்தது. ஆகவே, கூட்டணியை பற்றி எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொள்வார். நாம் அமைக்கவில்லை என்றால் கூட, ஸ்டாலினே கூட்டணியை அமைத்து தந்துவிடுவார். காலம் நமக்கு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை அமைத்து தரும்.
எப்போதெல்லாம் சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடைந்திருக்கிறோமோ, அடுத்த சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றியை பெற்றிருக்கிறோம். எனவே, அந்த நம்பிக்கையோடு அனைவரும் தேர்தலுக்காக பணியாற்றுங்கள்” என்று தெரிவித்தார்.
2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
ஆர்டர் செய்த சில நிமிடங்களில் கையில் ஐபோன்!