இந்தியா
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது… பின்னணி என்ன?

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது… பின்னணி என்ன?
துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் இன்று (டிசம்பர் 15) கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோவில், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பொது மேடையில் பேசினார். அதனால் அவருக்கு பிராமண தோஷம் ஏற்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் பிராமண தோஷத்தை நீக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு ஜோசியர் சொல்லியிருக்கிறார்.
அதனால், ஸ்ரீவல்லிபுத்தூர் ஜீயர் சுவாமி, ஆழ்வார்திருநகர் ஜீயர் சுவாமி, ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமி ஆகிய மூன்று பேருக்கும் பாதபூஜை செய்து உதயநிதி தோஷத்தை கழித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகளுடன் தான் பேசிய தொலைபேசி உரையாடலையும் அந்த வீடியோவில் இணைத்து வெளியிட்டிருந்தார் ரங்கராஜன் நரசிம்மன்.
இந்தநிலையில், தன்னுடைய தொலைபேசி உரையாடலை அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிட்டதாக ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமி சென்னை மத்திய குற்றப்பிரிவில் ரங்கராஜன் நரசிம்மன் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “எந்தவித தகவலும் தெரிவிக்காமல் என்னுடைய வீட்டிற்கு வந்து போலீசார் என்னை கைது செய்துள்ளனர். நான் தற்போது காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் என் மீது புகார் அளித்ததாக தெரிகிறது. விசாரணைக்காக போலீசார் என்னை சென்னைக்கு அழைத்து செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றொரு பதிவில் “என் மீது புகார் கொடுக்க ஸ்ரீபெரும்புதூர் ஜீயருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம்… நல்ல நேரத்திற்காக காத்திருந்த எடப்பாடி
ட்ரூ காலருக்குப் போட்டியாக ஒரு செயலி!