இந்தியா
“100 கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது” – சி.வி. சண்முகம் ஆவேசம்

“100 கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது” – சி.வி. சண்முகம் ஆவேசம்
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (15ம் தேதி) நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், “செயற்குழு நடக்கும் இந்த மண்டபம் அதிமுகவில் பல்வேறு திருப்பங்களை சந்தித்த ஒரு இடம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம் இருக்குமா இருக்காதா என்ற நிலையில், அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒரு சோதனையான காலகட்டத்தில், இந்த இயக்கத்தில் ஒரு தொண்டனாக இருந்து, தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, முதலமைச்சராகப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் ஜெயலலிதாவின் ஆட்சியைப் போல், சிறப்பான ஒரு ஆட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
53 ஆண்டுகள் காலத்தில் பல்வேறு சோதனைகளைக் இந்த இயக்கம் கண்டு இருக்கிறது. சின்னம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்போது சந்தித்த சோதனையாக்களை எதிரிகளால் மட்டுமல்லாமல், துரோகிகளால், 7.5 ஆண்டுகள் கண்டது அதிமுக. ஆனால், இப்படி எந்த சோதனை வந்தாலும் எக்குக்கோட்டையாக இன்று அதிமுக இருக்கிறது. அதற்குக் காரணம் இபிஎஸ்.
நம்மைத் தோற்கடிப்பதற்கு எவனும் இல்லை, நம்மைத் தோற்கடிக்க முடியாது, நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம் நம்பிக்கைதான் வெற்றிக்கு முதல் படி. நம் நம்பிக்கையைச் சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஊடகங்களை வைத்து நம் மீது மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்குதல் நடத்துகிறார்கள். அதை நாம் ஓரங்கட்ட வேண்டும். பத்திரிகைகளை நம்பியும், ஊடகங்களை நம்பியும் அதிமுக இல்லை. இரண்டு கோடி தொண்டர்களின் நம்பிக்கையில் இருக்கும் இயக்கம் அதிமுக.
எங்களுக்குள் எங்கே கருத்து வேறுபாடும், சலசலப்பும் எங்கே இருக்கிறது? சலசலப்பு வராதா, கருத்து வேறுபாடு வராதா என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் எங்கள் எழுச்சியைப் பாருங்கள்.
நம் பலம் நமக்குத் தெரிகிறதோ, இல்லையோ திமுகவுக்கு நிச்சயம் தெரியும். எந்த கொம்பன் வந்தாலும், 100 கருணாநிதி வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாத இயக்கம் அதிமுக.
இலங்கையிலும், வங்கதேசத்திலும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது. எதிர்க்கட்சியை இருக்கக் கூடாது எனக் கனவு கண்டு, கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற ஸ்டாலினுக்கு மக்கள் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா? மக்கள் பொங்கி விட்டார்கள் மக்கள் எழுச்சி அடைந்து விட்டார்கள், அதனால்தான் மக்கள் சேற்றால் அடித்துத் துரத்தி விட்டார்கள்.
தமிழகத்தை யார் ஆண்டு கொண்டிருப்பது என்றால் எடப்பாடி பழனிச்சாமிதான். மரக்காணத்தில் மழை வரும் பொழுது எங்கள் பொதுச் செயலாளர் களத்திற்கு வந்த பிறகுதான், விழுப்புரத்திற்கு முதல்வர் வந்தார். மக்களை எப்பொழுது சந்திக்க மறுக்கிறீர்களோ அப்பொழுதே நீங்கள் தோற்றுவிட்டீர்கள் நாங்கள் ஜெயித்து விட்டோம்.
கூட்டணி எப்போது என அனைவரும் கேட்கிறார்கள். 2001ல் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்புதான் கூட்டணி அமைந்தது. 2011 தேர்தலில், தேர்தல் அறிவித்து வேட்புமனுவின் போதுதான் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. கூட்டணி நிச்சயம் அமையும். அதைப் பொதுச் செயலாளர் பார்த்துக் கொள்வார்.
ஸ்டாலின் நமக்கு கூட்டணி அமைத்து கொடுத்துவிடுவார். காலம் நமக்கு அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைத்துத் தரும். எப்போதெல்லாம் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைகிறதோ அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. அந்த எழுச்சியோடு பணி செய்து, அதிமுக வெற்றி பெற்று இபிஎஸ் முதலமைச்சராக அமர வேண்டும்” என்று பேசினார்.