இந்தியா
Aadhav Arjuna: “இந்த நிமிடம் வரை..” – திருமாவின் ‘மறைமுக செயல்திட்டம்’ குற்றச்சாட்டுக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்!

Aadhav Arjuna: “இந்த நிமிடம் வரை..” – திருமாவின் ‘மறைமுக செயல்திட்டம்’ குற்றச்சாட்டுக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக குறித்து பேசியது சர்ச்சையாக கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனால் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில், நேற்று அவர் அளித்த பேட்டிகள் மீண்டும் வைரலானது. அதில் திருமாவளவன் குறித்தும், திமுக குறித்தும், விசிக குறித்தும் மீண்டும் பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது. நான் அது சுதந்திரமாக எடுத்த முடிவுதான்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் தொடர்ந்து இப்படிப் பேசி வருவது அவருக்கு என்னவோ ஒரு மறைமுக செயல்திட்டம் இருப்பதாக தெரிகிறது.
இடைநீக்கம் என்பது வெறும் கண் துடைப்பு அல்ல. கட்சி நடைமுறை விதிகளின்படி ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு முரண்பாடான கருத்துகளை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பேசி வருவது தவறு. ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறு ஒரு திட்டம் இருப்பதால்தான், இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். ஆறு மாதத்திற்கு பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும்.” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதவ் அர்ஜுனாவின் செயல்திட்டம் குறித்து கேள்வி எழுப்பி திருமாவளவன் பேசிய சில மணிநேரங்களில் விசிகவில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.
அதுதொடர்பாக திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தில் தனது செயல்திட்டம் என்னவென்பதையும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயல்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எளிய மக்கள் குறிப்பாக, ‘சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்’ என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயல்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.
ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.” என்று கடிதத்தில் ஆதவ் அர்ஜுனா தனது செயல்திட்டம் குறித்து விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.