இந்தியா
One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..? மத்திய அமைச்சரவை விளக்கம்!

One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..? மத்திய அமைச்சரவை விளக்கம்!
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4 ஆயிரத்து 120 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அறிக்கை அளித்த நிலையில் அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் அதை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசியல் சாசனப் பிரிவுகளான 83, 172 மற்றும் 327-ஐ திருத்தி புதிதாக ஒரு பிரிவையும் சேர்க்க வேண்டியுள்ளதாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் நாளை மறுநாள் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். 129 ஆவது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவாக இது அறிமுகம் செய்யப்படுகிறது. மசோதா சட்டமாக இயற்றப்பட்டாலும் 2029-ம் ஆண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் சட்டம் நடைமுறைக்கு வரும் தேதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 2034க்கு பிறகு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒரு மசோதாவும், டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சீர்திருத்தத்திற்காக மற்றொரு மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒரே கட்டமாக நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த அதிக அளவிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்பதால் அதற்கு மூன்று ஆண்டு காலம் ஆகும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.