இந்தியா
TN Rains | பார்க்கும் இடங்களெல்லாம் தண்ணீர்..! தென் மாவட்டங்களை சூழ்ந்த வெள்ளம்

TN Rains | பார்க்கும் இடங்களெல்லாம் தண்ணீர்..! தென் மாவட்டங்களை சூழ்ந்த வெள்ளம்
புயல் மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சமீபத்தில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக முதலில் வடமாவட்டங்களில் கொட்டிய கனமழை, பிறகு உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது.
இதில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் குளம் போன்று மழைநீர் தேங்கி இருப்பதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். நெல்லை மாவட்டத்தில் கனமழையால், சுமார் 3000 ஏக்கர் அளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
“வாழை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான வாழை மரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. புளியங்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், திருநெல்வேலி – ஸ்ரீவைகுண்டம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.
காட்டாற்று வெள்ளம் காரணமாக, முண்டந்துறை வனப்பகுதிக்குள் உள்ள அகத்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் புகுந்ததால், செங்கனூர் கிராமம் தனித்தீவாக மாறியது. “4 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை இருப்பதாக” அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
குற்றாலத்தில் 3 ஆவது நாளாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனிடையே, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானைக்குட்டி குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர். மேலும், தென்காசி ராமநதி அணை முழுவதுமாக நிரம்பியதால், விநாடிக்கு 500 கன அடிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், சுமார் 300 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மங்களகிரி விலக்கு அருகே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சூசைபாண்டியாபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
சிதம்பராபுரம் கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மின்சாரக் கம்பம் முறிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளில் 23 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. விளாத்திகுளம் அருகே 5000 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
புன்னைக்காயலில் வீடுகளில் தண்ணீர் புகுந்த நிலையில், பொதுமக்கள் அருகில் உள்ள மாதா கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு உறவினர்கள் வீடுகளில் இருந்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவில்பட்டி அருகே வெள்ளத்தில் காரோடு அடித்துச் செல்லப்பட்ட தனியார் நிறுவன ஊழியரை அப்பகுதி இளைஞர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பாதுகாப்பாக மீட்டனர். வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முழுவதும் மழை வெள்ளநீர் சூழ்ந்து குளமாக மாறியது. தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு நீர் செல்லும் நிலையில், ஏரல்-குரும்பூர் தரைப்பாலம் மூழ்கியுள்ளது.
தென்மாவட்டங்கள் மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டது. தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும் மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடி நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம், திருவிடைமருதூர், பூதலூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஏரி மற்றும் குளங்கள் முழுவதும் நிரம்பின. மேலும் செண்பக வடிகால் வாரி முறையாக தூர்வாரப்படாததால் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களை வெள்ள நீர் சூழ்ந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரத்தில் வாய்க்காலில் தேங்கி இருந்த மழை நீரில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது. அதேபோல், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அத்தியாவசிய பணிகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர் மழையால் சங்கேந்தி, வடசெங்கேந்தி, அரியலூர், பின்னத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஓடம்போக்கி ஆற்றின் தடுப்பணை நிரம்பி விளை நிலங்களை வெள்ள நீர் சூழ்ந்ததால் நீர்வள அதிகாரிகள் விரைந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பின் மீண்டும் மழை கொட்டியதால் வெளிப்பாளையம், பால்பண்ணைச்சேரி, காடம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நண்டலாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பால் கொட்டித் தீர்த்த கனமழையால் 3500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மயிலாடுதுறை அருகே ஊருகுடி கிராமத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட மாற்றுத்திறனாளியை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். நண்டலாற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ள நீர் நல்லாடை, அரசூர், கொத்தங்குடி, விளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களை சூழாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி பொதுப் பணித் துறையினர் தடுத்து வருகின்றனர்.
நண்டலாற்றில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ள நீர் புகுந்த குடியிருப்பு மற்றும் விளை நிலங்களை ஆய்வு செய்த பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மற்றும் வேளாண், வருவாய்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
மேலும், வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பால் கடலூர் மாவட்டம் மேல வன்னியூர், கீழ வன்னியூர் கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கிய நிலையில், மக்கள் தங்களது உடைமைகளை தலையில் சுமந்து கொண்டு கடந்து சென்றனர்.
அரியலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ள நீர் வடிந்ததும் சேதங்களுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பகுதியில் வெள்ள நீருடன் முதலையும் அடித்து வரபட்டதால் மக்கள் அச்சத்திற்குள்ளாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவிலில் 3 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் 5000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.