விளையாட்டு
‘உங்களை மட்டும் அவனால் ஜெயிக்கவே முடியலையே’ – குகேஷின் தந்தை வியந்த வீரர் யார் தெரியுமா?

‘உங்களை மட்டும் அவனால் ஜெயிக்கவே முடியலையே’ – குகேஷின் தந்தை வியந்த வீரர் யார் தெரியுமா?
உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ள குகேஷ்க்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. சென்னையில் நாளை அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படுகிறது. ஆனால், குகேஷால் இதுவரை தோற்கடிக்க முடியாத ஒரு வீரர் உண்டு. அவர் நிரந்தர செஸ் வீரரும் அல்ல. சீசனாக விளையாடுபவர்தான். அந்த வீரர் யார் தெரியுமா?
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அனில்குமார்தான். இவருடன் குகேஷ் 3 முறை செஸ் விளையாடியுள்ளார். ஆனால் 3 முறையும் தோல்வியை தழுவியுள்ளார். இவரிடத்தில் குகேஷின் தந்தை ரஜினிகாந்த் , ‘உங்களை மட்டும் என் பையனால் ஜெயிக்கவே முடியலையே’ என்று வேடிக்கையாக கூறுவது உண்டு. அனில்குமார் 7 முறை கேரள சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, குகேஷ் உலகச் சாம்பியன் ஆனது குறித்து அனில்குமார் கூறியதாவது, ‘டிங்குடன் குகேஷ் அருமையாக விளையாடினார்.நான் அவருடன் விளையாடும் போதே, எப்போதாவது இந்த பையன் அத்தகைய உயரத்தை எட்டுவான் என்று நினைத்தேன். தற்போது அது நடந்துள்ளது ‘ என்கிறார்.
டிங்கின் தோல்வி குறித்து ரஷ்ய செஸ் அமைப்பு கூறியுள்ளதாவது, விளையாட்டில் தவறு செய்தால்தான் மற்றவர் வெற்றி பெற முடியும். 14வது சுற்றில் டிங் செய்த ஒரு தவறு குகேஷை சாம்பியன் ஆக்கியுள்ளது. தவறு நடந்தால்தான் கால்பந்து விளையாட்டில் கோல் அடிக்க முடியும் .ஒருவர் செய்யும் தவறை வைத்துதான் மற்ற போட்டியாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.