இந்தியா
Farmer Success Story: ”Zero முதலீடு” – ஒருங்கிணைந்த பண்ணையில் லட்சக்கணக்கில் வருவாய்… அசத்தும் புதுக்கோட்டை பெண்…

Farmer Success Story: ”Zero முதலீடு” – ஒருங்கிணைந்த பண்ணையில் லட்சக்கணக்கில் வருவாய்… அசத்தும் புதுக்கோட்டை பெண்…
ஒருங்கிணைந்த பண்ணையில் அசத்தும் நிஷா மைதீன்.
பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மத்தியில், இயற்கை விவசாயம் குறித்த எந்த ஒரு முன் அனுபவமும் பயிற்சியும் இல்லாமல், முழு ஆர்வத்துடன் இயற்கை விவசாயத்தில் இறங்கிய பெண்மணி தான் புதுக்கோட்டை சேர்ந்த நிஷா மைதீன்.
பட்டதாரி ஆசிரியர் என்ற போதிலும் விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாயத்தில் அசத்தி வருகிறார். குறிப்பாக ஜீரோ இன்வெஸ்ட்மென்ட் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இவர் இயற்கை விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகிறார். 5 ஏக்கர் நிலத்தில் தென்னை, காய்கறிகள், தேன், மண்புழு உரம், இயற்கை இடுபொருட்கள், கோழி, மாடு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என ஒருங்கிணைந்த பண்ணையாக அமைத்து வருமானம் ஈட்டி வருகிறார் நிஷா.
இவை அனைத்தையும் சரிவர முழு முயற்சியுடன் செய்து லட்சக்கணக்கில் லாபம் பெற்று அசத்தி வரும் இயற்கை விவசாயி நிஷா பற்றிய ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவரங்குளம், வேப்பங்குடியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியரான நிஷா விவசாயம் மீது அளவு கடந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளார். ஆர்வம் எப்படி வந்தது, தற்போது இருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு இடத்தை தேர்வு செய்து எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் தொடங்கியது தான் இந்த ஒருங்கிணைந்த பண்ணை என நிஷா தெரிவிக்கிறார். இன்று வரை எந்த செயற்கை உரமும் இல்லை என்றும் பஞ்சகாவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம் அனைத்து நாங்களே தயாரித்து அதனை இந்த பண்ணைகளில் பயன்படுத்துவதாக நிஷா தெரிவிக்கிறார். தங்கள் தோட்டத்திற்கு மட்டுமின்றி வெளி விவசாயிகளுக்கும் இடுபொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக நிஷா தெரிவித்தார். அதுமட்டுமின்றி இயற்கை விவசாயம் சார்ந்த கற்று கொள்ள நினைக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தங்களுடைய ஒருங்கிணைந்த பண்ணையில் தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை, கீரை, பலா, போன்றவை எல்லாம் விளைகிறது என்றும், இவற்றை வாட்ஸ்அப் வழியாக கேட்பவர்களுக்கு விற்பனை செய்வது போக மீதம் உள்ளவற்றை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றிவிடுவதாக நிஷா தெரிவித்தார். இங்கே இருக்கும் பொருட்களை வைத்து உரங்கள் தயாரிப்பதுல இருந்து மதிப்பு கூட்டு பொருளாக்குவது என அனைத்து விஷயங்களும் நாங்கள் செய்வதால், தங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் பூஜ்யமாக இருக்கிறது என்கிறார்..
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “நோ இன்வெஸ்ட்மென்ட்ல ஒரு ஃபுல் இயற்கை விவசாயம் நல்லா போயிட்டு இருக்கு. இப்போ நாலு பேர் பண்ணையில் வேலை செய்றாங்க. என்னோட பண்ணையில ஆண்டு வருமானம், மாத வருமானம், தினசரி வருமானம் என மூன்று பிரிவுகளாக பிரித்து பாத்துக்கிட்டு இருக்கேன். அதுல நாலு பேருக்கு சம்பளம் போக மீதி இருக்க எல்லாமே எனக்கு லாபமா தான் இருக்கு.
என்ன பொறுத்த வரையில் விவசாயி வியாபாரி ஆகணும், இருக்கிற பொருள அப்படியே விக்காமல் அதை எப்படி லாபகரமாக மாத்தலாம் அப்படிங்கறது யோசிக்கணும், தன்னம்பிக்கை இருக்கணும் அத்தோடு முழு உழைப்பு இதெல்லாம் இருந்தா கண்டிப்பா அனைவரும் விவசாயத்தில் முன்னேறி வருமானத்தை கூட்டலாம்” என்கிறார் சிங்க பெண் நிஷா.