இந்தியா
Jasmine Farming: அழுகல் நோயால் பொய்க்கும் மல்லிகை விளைச்சல்… நோய் தாக்குதலை ஒழிந்தால் மல்லிகை விவசாயம் செழிக்கும்…

Jasmine Farming: அழுகல் நோயால் பொய்க்கும் மல்லிகை விளைச்சல்… நோய் தாக்குதலை ஒழிந்தால் மல்லிகை விவசாயம் செழிக்கும்…
மல்லிகை செடியை தாக்கும் பூஞ்சை நோய்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடம், அக்காள்மடம் ஆகிய பகுதிகளில் மல்லிகை விளைச்சல் பிரதானமாக காணப்படுகிறது. இங்கிருந்து சேகரிக்கப்படும் மல்லிகை பூக்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து மல்லிகை செடி நாற்றுகளை நடவு செய்யும் பணியில் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நடவு செய்த 20 முதல் 25 நாட்களில் செடிகளில் ஒருவகையான பூஞ்சாணம் அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மல்லிகை செடிகளில் இந்த தாக்குதல் காரணமாக பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு மஞ்சள் நிறத்திற்கு மாறி பின்பு ஒவ்வொரு இலைகள் மற்றும் செடிகளில் பரவி செடிகள் மற்றும் பூக்கள் கருகி போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கு இயற்கை மற்றும் செயற்கையான மருந்துகள் பயன்படுத்தியும் இதனை தடுக்க முடியாத சூழலில், வேளாண்மை துறையின் மூலம் “சூடோமோனஸ்” என்ற தீங்கு விளைவிக்கும் நோய் தாக்குதலை தடுக்கும் மருந்தினை பயன்படுத்தி ஓரளவு செடிகள் பாதுகாக்கப்படுகிறது. மழைகாலத்தில் இந்த பாதிப்பு வருவதால் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை தடுத்து, செடிகளுக்கு மேல் அமைக்கப்பட்டிருக்கும் கூரை தட்டிகளை எடுத்து வெயில்படும் அளவிற்கு வைத்து தற்காலிக பாதுகாப்பாக நோய் தாக்குதலை கட்டுப்படுத்த இம்முறை பின்பற்றப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அழுகல் பூஞ்சாணம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு அரசு ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கான தீர்வுகளை கண்டறிந்து மல்லிகை செடிகள் மழை காலத்தில் செழித்து வளர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கார்த்திக் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.