இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது வாக்கெடுப்பு : கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புதல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது வாக்கெடுப்பு : கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புதல்!
ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று (டிசம்பர் 17) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு முடிவில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மக்களவையில் இன்று அறிமுகம் செய்தார்.
மசோதாவிற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, சமாஜ்வாடி கட்சி எம்.பி தர்மேந்திர யாதவ், சரத் பவார் ஆதரவு என்.சி.பி எம்.பி சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மின்னனு வாக்கெடுப்பை நடத்தும்படி கோரினர்.
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அமைச்சரவையில் ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதை விரிவான விவாதத்திற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். சட்ட அமைச்சர் அந்த மசோதாவை ஜேபிசிக்கு அனுப்ப விரும்பினால், அதன் அறிமுகம் பற்றிய விவாதம் இத்துடன் முடியும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவை ஜேபிசிக்கு அனுப்ப வாக்கெடுப்பு நடத்த கோரினார்.
அதன்படி நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட மின்னனு வாக்கெடுப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப அதிகம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.
மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 269 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு எதிராக 196 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி மக்களவையை 3 மணி வரை அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம்பிர்லா.