Connect with us

இந்தியா

“தமிழ்நாடு ஒரு நாள் உலகின் செஸ் தலைநகராக உயரட்டும்” – குகேஷ் பாராட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்

Published

on

“தமிழ்நாடு ஒரு நாள் உலகின் செஸ் தலைநகராக உயரட்டும்” - குகேஷ் பாராட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்

Loading

“தமிழ்நாடு ஒரு நாள் உலகின் செஸ் தலைநகராக உயரட்டும்” – குகேஷ் பாராட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்

உலக சாம்பியன்ஷிப் வென்ற குகேஷை பாராட்டி, அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 5 கோடி பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

Advertisement

இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் உலக சாம்பியன்ஷிப் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசுக்கான காசோலையை வழங்கினார்.

பிறகு நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று இன்றைக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும், இந்திய ஒன்றியத்தையும், உலகமே திரும்பிப் பார்க்கின்ற வகையில், சாதனை படைத்துள்ள தம்பி குகேஷிற்கு பரிசுத் தொகை வழங்கி, பாராட்டுகின்ற விழாவில் வரவேற்புரை ஆற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

தன்னுடைய 18-ஆவது வயதில் 18 ஆவது உலக செஸ் சாம்பியன் என்று உயர்ந்து நிற்கும் தம்பி குகேஷைப் பார்த்து ஒட்டு மொத்த இந்தியாவும், தமிழ்நாடும் இன்றைக்கு பெருமை கொள்கின்றது. உலகளவில், செஸ் என்றால், சென்னை; சென்னை என்றால் செஸ் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தம்பி குகேஷின் சாதனை அமைந்திருக்கின்றது.

Advertisement

எப்படி குகேஷின் சாதனையைக் கண்டு அவருடைய பெற்றோர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கின்றார்களோ, அதே உணர்வோடு தான் நம்முடைய முதலமைச்சரும், நம்முடைய திராவிட மாடல் அரசும் இன்றைக்கு மகிழ்ச்சியோடு இருக்கின்றது.

நேற்று கூட விமான நிலையத்தில் இருந்து அவர் திரும்பிய போது, வழிநெடுக நம்முடைய சென்னை மக்கள் அவருக்கு ஒரு சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கின்றார்கள். அவரின் சாதனையை, தமிழ்நாடு தன்னுடைய சாதனையாக இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

Advertisement

சென்னை செஸ் மாஸ்டர்ஸ் போட்டியை சென்ற வருடம் நடத்திய போது, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குச் செல்லும் முன்பே தம்பி குகேஷுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கினார். தம்பி குகேஷோ, எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாத மாபெரும் ஒரு வெற்றியை நமக்காக பெற்று வந்திருக்கின்றார்.

அதனால் தான் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருந்த போது, நம்முடைய முதலமைச்சர், தமிழ்நாடு அரசு சார்பில், பாராட்டோடு சேர்த்து உடனடியாக பரிசுத் தொகையையும் அறிவித்தார்.

11 வயதில் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தனது வெற்றிக் கணக்கைத் துவங்கிய தம்பி குகேஷ், இன்றைக்கு, 18 வது வயதில் சீனியர் சாம்பியன்ஷிப்பிலும் சாதித்துக் காட்டி இருக்கின்றார். அவர் இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கட்டும். அவருக்கு நம்முடைய கழக அரசும், நம்முடைய முதலமைச்சரும் என்றென்றும் துணை நிற்பார்கள்.

Advertisement

கிரிக்கெட் எப்படி பட்டிதொட்டி எங்கும் இன்றைக்கு சென்று சேர்ந்திருக்கின்றதோ, அதே போல, தம்பி குகேஷின் வெற்றி செஸ் போட்டியையும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்க்கும் என்பது உறுதியாகும். அதன் தொடர்ச்சியாக இன்னும் பல நூறு கிராண்ட் மாஸ்டர்கள் நம்முடைய கிராமப்புறங்களில் இருந்து வருவார்கள். தமிழ்நாடு ஒரு நாள் உலகின் செஸ் தலைநகராக உயரட்டும். அதற்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என்று பேசினார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன