இந்தியா
வி.ஏ.ஓ.வை அலுவலகத்தில் வைத்து பூட்டிய கொடூரம்; உதவியாளரின் அதிர்ச்சி செயல்

வி.ஏ.ஓ.வை அலுவலகத்தில் வைத்து பூட்டிய கொடூரம்; உதவியாளரின் அதிர்ச்சி செயல்
கள்ளக்குறிச்சி அருகே பெண் கிராம நிர்வாக அலுவரை, கிராம உதவியாளரே அலுவலகத்தில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
அதே அலுவலகத்தில் கிராம உதவியாளராக சங்கீதா என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தமிழரசியை அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு, அங்கிருந்த பதிவேடுகளை தனது இருசக்கர வாகனத்தில் சங்கீதா தூக்கிச் சென்றார்.
தமிழரசி கூப்பிட்டும் அதனைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சங்கீதா கிளம்பினார். இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அரை மணி நேரம் கழித்து கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டு தமிழரசி மீட்கப்பட்டார்.
பணியின் போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சங்கீதா அலுவலகத்தை பூட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.