இந்தியா
Erode East | ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Erode East | ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா போட்டியிட்டார். ஆனால் கடந்த ஆண்டு அவர் மறைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியது திமுக கூட்டணி. இதனால், திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சனிக்கிழமையன்று (14.12.2024) உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இந்த சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்தது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், வரவிருக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.