இந்தியா
“கடன்.. வாடகை வீடு என பல பிரச்சனை.. கேரம் என் வாழ்வையே மாற்றிவிட்டது” – உலக சாம்பியன் காசிமா நெகிழ்ச்சி

“கடன்.. வாடகை வீடு என பல பிரச்சனை.. கேரம் என் வாழ்வையே மாற்றிவிட்டது” – உலக சாம்பியன் காசிமா நெகிழ்ச்சி
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த காசிமா மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா, தனது கடின உழைப்பின் மூலம் சர்வதேச அரங்கில் சாதனை படைத்தார். காசிமா மற்றும் அவரது பயிற்சியாளருடன், நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் DISCO WITH KS நிகழ்ச்சியில் கலந்துரையாடினார். அப்போது, மற்ற விளையாட்டுகளைப் போன்று கேரமையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்று மரிய இருதயம் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தது. இதற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காசிமாவிடம் வழங்கினார்.
இந்நிலையில், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா 1 தங்கப் பதக்கம் வென்ற மித்ராவுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 50 லட்சம் ரூபாய் அரசு வழங்கியுள்ளது. இதேபோன்று, குழு போட்டியில் ஒரு தங்கம், மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற நாகஜோதிக்கும் 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தில் நடைபெற உள்ள 6 விதமான கேரம் போட்டியில் கலந்துகொள்ள நிதியுதவி கோரிய தமிழ்நாடு வீரர் ரிவன் தேவ் ப்ரீதமிற்கு 5 லட்சம் ரூபாயை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதனையடுத்து கேரம் உலக சாம்பியன்ஷிப் காசிமாவை சந்தித்தோம். அவர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “இவ்வளவு பெரிய தொகையை இதற்கு முன்பாக நான் பார்த்தது கிடையாது. அதுவும் தற்போது எனக்கே கிடைத்திருக்கிறது எனும்போது மிகுந்த மகிழ்ச்சி. விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.
போட்டி முடிந்து சென்னை திரும்பிய பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தபோது, கண்டிப்பாக என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும் எனத் தெரிவித்திருந்தார். எங்கள் கிளப்பை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தேன். தற்போது அவர்கள் சொன்னதுபோல், ஊக்கத்தொகையும் கொடுத்து கிளப்பும் அமைத்துக் கொடுப்பதாக சொல்லியுள்ளனர்.
விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் #திராவிட_மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு… pic.twitter.com/i8NxA7Ry9X
ஒவ்வொரு முறையும் போட்டிக்கு வெளியே செல்லும்போது கடன் வாங்கிச் செல்வோம். எனக்கு இந்தத் தொகை கிடைத்தது என்பதைவிட இனி வரும் வீரர்களுக்கு இது மிகவும் உந்துதலாக இருக்கும்.
தற்போதுவரை நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். கேரம் விளையாட்டு எனது வாழ்வையே மாற்றிவிட்டது” என்றார்.
அவரது தந்தை பேசியபோது, “மகனை சாதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்ல வேண்டியதானது. தேசிய அளவு போட்டிகள், டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் நடக்கும் அப்போது காசிமாவை அங்கு அழைத்துச் செல்ல வெளியே கடன் வாங்குவது, நண்பர்கள் உதவி செய்வார்கள் அதனை வைத்து தான் அவரை போட்டிகளுக்கு அழைத்துச் செல்வேன்.
நாங்கள் முதலில் துணை முதல்வரைச் சந்தித்தபோது கிளப் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். தற்போது அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் அதனை நினைவில் வைத்து அதிகாரியிடம் கிளப் விஷயம் என்னானது என்று கேட்கிறார். அவரது நெருக்கடியான பணிக்கு இடையிலும் இதனை நினைவு வைத்துள்ளார் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. கேரம் விளையாட்டிற்கு துணை முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். விளையாட்டு வீரருக்கு என்ன மரியாதை தரவேண்டுமோ அதனை அவர் தருகிறார்” என்றார்.