இந்தியா
Gukesh | “குகேஷின் சிறந்த பண்புகள் இவைதான்” – மேடையில் புகழ்ந்த விஷ்வநாத் ஆனந்த்

Gukesh | “குகேஷின் சிறந்த பண்புகள் இவைதான்” – மேடையில் புகழ்ந்த விஷ்வநாத் ஆனந்த்
சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை தமிழ்நாடு அரசு நடத்தாமல் இருந்திருந்தால், தன்னால் சாம்பியன் பட்டம் வென்றிருக்க முடியாது என்று குகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில், “செஸ் என்றாலே தமிழ்நாடுதான்” என்ற நிலையை அடைந்துள்ளதாக விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று சாதனை படைத்த குகேஷுக்கு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக வாலாஜா சாலையில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் குகேஷ். அவருக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
வழி நெடுகிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தேசியக் கொடியுடன் குகேஷிற்கு பிரம்மாண்ட வரவேற்பு தந்தனர். கலைவாணர் அரங்கத்துக்கு குகேஷ் வந்ததும், புலியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என அந்த இடமே விழாக்கோலம் பூண்டது. நிகழ்ச்சி தொடங்கியதும், உலக சாம்பியன்ஷிப் வெற்றிக் கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார் குகேஷ்.
அதன் பிறகு, மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், “31 கிராண்ட் மாஸ்டர்களை வைத்துள்ள தமிழ்நாடுதான் உலக அளவில் செஸ்ஸின் அடையாளம்” என்றார். மேலும் நிதானம் மற்றும் கவனச்சிதறல் இன்மைதான் குகேஷின் சிறப்பான பண்புகள் என பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய உலக சாம்பியன் குகேஷ், “உலக அரங்கில் செஸ் விளையாட்டிற்கு சிறந்த இடம் சென்னைதான்” என்று பெருமிதம் தெரிவித்தார். சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை தமிழ்நாடு அரசு நடத்தாமல் இருந்திருந்தால், தன்னால் சாம்பியன் பட்டம் வென்றிருக்க முடியாது என்று குகேஷ் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குகேஷ், செஸ் உலகில் இந்தியர்கள் அதிகம் சாதிக்க வேண்டும் என்று கூறினார். தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியிலும் தனக்கு நிறைய உதவிகளை செய்ததாகவும் அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.