இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல்; மக்களவையில் நடந்த பிரச்சனை – உண்மையை உடைத்த எம்.பி. சு. வெங்கடேசன்

ஒரே நாடு ஒரே தேர்தல்; மக்களவையில் நடந்த பிரச்சனை – உண்மையை உடைத்த எம்.பி. சு. வெங்கடேசன்
பா.ஜ.க.வின் முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம். கடந்த ஆண்டுகளில் இது குறித்து பரவலான பேச்சும் விமர்சனமும் இருந்துவந்த நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதற்கான கருத்துக் கேட்பின்போது, தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 15 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் அ.தி.மு.க. உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்தக் குழு தனது ஆய்வை முடித்து 2024 மார்ச் 14-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தனது 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வழங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த செப். 18-ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவைக் குழு ஏற்றுக்கொண்டு அதற்கு ஒப்புதல் வழங்கியது.
அதன் அடிப்படையில் இன்று நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான் வாக்கெடுப்பில், 369 எம்.பி.க்கள் பங்கேற்ற நிலையில் கூட்டுக்குழுவுக்கு மசோதாவை அனுப்ப 220 எம்.பி.க்கள் ஆதரவும், 149 எம்.பி.க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இனி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு உட்படுத்தும். கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில், இந்த மசோதா மீதான வாக்குப் பதிவின் போது நாடாளுமன்ற மக்களவையில் பாதி மின்னணு வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை என சி.பி.எம். மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஒரே தேர்தல் …
மக்களவையே முன்மாதிரி !
மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது.
மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே… pic.twitter.com/gyOvq2h8qz
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரே தேர்தல்.. மக்களவையே முன்மாதிரி! மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னணு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர். ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது” என்று பதிவு செய்துள்ளார்.