இந்தியா
பங்கம் செய்யும் சுங்கச்சாவடிகள்… தனியார் பேருந்து கட்டணம் உயர்வா?

பங்கம் செய்யும் சுங்கச்சாவடிகள்… தனியார் பேருந்து கட்டணம் உயர்வா?
புதிதாக அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டை திறக்கக் கூடாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையை பயன்படுத்துவோரிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வந்தன.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த எணிக்கையை 70ஆக அதிகரித்து நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.
ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்ற சுங்கச்சாவடிக்கும் இடையே சுமார் 60கிமீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தின் பல இடங்களில் 30 கிமீ, 40 கிமீ இடைவெளிக்குள்ளேயே டோல் கேட் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிகளவு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில், கடலூர் – சிதம்பரம் வழியில் உள்ள கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுங்கச்சாவடி திறக்கப்படாததால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.
இந்தசூழலில், வரும் டிசம்பர் 23ஆம் தேதி சுங்கச்சாவடியை திறந்து கட்டணம் வசூல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி,
ஒற்றை பயணித்திற்கான கட்டணம்: ரூ.125
ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் : ரூ.185
ஒரு மாதத்திற்குள் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம்:ரூ. 4,165
மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒற்றை பயணத்திற்கான கட்டணம் : ரூ. 60
ஒற்றை பயணித்திற்கான கட்டணம்: ரூ.200
ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் : ரூ. 305
ஒரு மாதத்திற்குள் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம்:ரூ. 6,725
மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒற்றை பயணத்திற்கான கட்டணம் : ரூ.100
ஒற்றை பயணித்திற்கான கட்டணம்: ரூ.425
ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் : ரூ.635
ஒரு மாதத்திற்குள் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம்:ரூ. 14,090
மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒற்றை பயணத்திற்கான கட்டணம் : ரூ. 210
ஒற்றை பயணித்திற்கான கட்டணம்: ரூ.460
ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் : ரூ. 690
ஒரு மாதத்திற்குள் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம்:ரூ. 15,370
மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒற்றை பயணத்திற்கான கட்டணம் : ரூ. 230
ஒற்றைபயணித்திற்கான கட்டணம்: ரூ.665
ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் : ரூ. 995
ஒரு மாதத்திற்குள் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம்: ரூ. 22,095
மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒற்றை பயணத்திற்கான கட்டணம் : ரூ. 330
ஒற்றைபயணித்திற்கான கட்டணம்: ரூ.805
ஒரு நாளுக்குள் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் : ரூ.1,210
ஒரு மாதத்திற்குள் 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம்: ரூ. 26,900
மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஒற்றை பயணத்திற்கான கட்டணம் : ரூ.405 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுங்கச்சாவடி திறப்பதை கண்டித்தும், அதிகளவு சுங்கக்கட்டணம் போடப்பட்டுள்ளதை கண்டித்தும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம் , லாரி உரிமையாளர்கள் சங்கம், பாமகவினர் உட்பட பலரும் போராட்டத்தின் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நெடுஞ்சாலை ஆணையத்தின் (நகாய்) திட்ட அதிகாரி சக்திவேல், வியாபாரி சங்கத் தலைவர் சண்முகம், தனியார் பேருந்து சங்க நிர்வாகிகள் தேசிங்கு ராஜன், டாக்டர் சதீஷ் குமார், யுவராஜ், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, பிரகாஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, “எங்களது வருமானத்தை விட சுங்கக் கட்டணம் அதிகமாக உள்ளது” என்று ஆலோசனையில் கலந்துகொண்டவர்கள் சொல்ல, அதிகாரி சக்திவேல், “உங்களது கோரிக்கைகளை மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
இதுபற்றி தனியார் பேருந்து சங்க நிர்வாகி தேசிங்கு ராஜன் மற்றும் சதீஷ் குமார் மின்னம்பலத்திடம் கூறுகையில், “புதிதாக திறக்கப்படக் கூடிய கொத்தட்டை சுங்கச்சாவடியில் தனியார் பேருந்துகளுக்கு ஒரு மாதத்திற்கு 50 ஒற்றை பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணமாக 14,090 ரூபாய் கேட்கிறார்கள்.
ஆனால், ஆர்டிஓ ஆபிசில் எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 டிரிப் சென்றுவர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நாளைக்கு 8 டிரிப் தான் போக முடியும்.
ஒரு டிக்கெட் விலை 31 ரூபாய். சராசரியாக 55 பேர்தான் பயணிக்க முடியும்.
அப்படியானால் ஒரு டிரிப்புக்கு 1,705 ரூபாயும், 8 டிரிப்புக்கு 13,640 ரூபாயும் கிடைக்கும்.
கடலூர் டூ சிதம்பரம் செல்ல 50 கிமீ இயக்க வேண்டும். நாளொன்றுக்கு 400 கிமீ ஓட்ட வேண்டும். ஒரு லிட்டர் டீசல் 4 கிமீ தான் மைலேஜ் கொடுக்கும். அப்படி என்றால் 100 லிட்டர் டீசல் 9,450 ரூபாய். டிரைவர் கண்டெக்டர் சம்பளம் 3,000 ரூபாய்.
அடுத்ததாக சிதம்பரம் மற்றும் கடலூர் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்துவதற்கு நகராட்சி/மாநகராட்சி கட்டணம், பேருந்து நிலைய புரோக்கர் கட்டணம் என நாளொன்றுக்கு 200 ரூபாய்.
தினம்தோறு இரவு நேரத்தில் பேருந்தை கழுவுவதற்கு 200 ரூபாய். டிக்கெட் பரிசோதகருக்கு (செக்கர்) 500 ரூபாய்.
இவ்வாறாக ஒரு நாளைக்கு செலவு மட்டும் 13,350 ரூபாய் ஆகிவிடும். இந்த செலவு போக ( வருமானம் -13,640 : செலவு – 13,350) ரூ.290 தான் கைக்கு கிடைக்கும் கொடுக்க வேண்டும்.
இது இல்லாமல் வருஷத்துக்கு இன்சூரன்ஸ் ஒரு லட்சம் ரூபாய். சாலை வரி மூன்று மாதத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1,60,000 ரூபாய் வரி செலுத்துகிறோம்.
வருடம் தோறும் எப்சிக்கு (FC) எடுக்க 1.50 லட்சம் ரூபாய் செலவாகும். இது இல்லாமல் மெயிண்டனஸ், ஆண்டுதோறும் டயர் மாற்றுதல், சர்வீஸ் செலவு வேற உள்ளது.
இவ்வளவு இருக்க வட்டி கட்ட முடியாமல் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.
சாலையில் ஓட்டுவதற்கு சாலை வரியும், சாலையை பராமரிக்க பசுமை வரியும் செலுத்தி… கடைசியாக சுங்கச்சாவடியில் 50 டிரிப்புக்கு ரூ.14,090 என்று மாதம் சுமார் 250 டிரிப்புக்கு 70,450 ரூபாய் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்து வேண்டுமானால், சாலை வரியை ஏன் அரசு வசூலிக்கிறது.
புதிய வண்டி வாங்கும் போது பதிவு கட்டணம், சாலை வரி கட்டணம் என்று லட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். இதை பகல் கொள்ளையாகத்தான் நாங்கள் கருதுகிறோம்” என்றனர்.
மேலும், “நாடாளுமன்றத்தில் எவ்வளவோ பிரச்சினைகளை விவாதிக்கிறார்கள். ஆனால் மத்திய மாநிலத்தில் ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் சுங்கசாவடிகளுக்கு எதிராக பேசாததற்கு என்ன மர்மம்.
கடந்த 2018 ஜனவரி மாதம் கிலோ மீட்டருக்கு 42 பைசாவாக இருந்த பஸ் கட்டணத்தை 52 பைசாவாக உயர்த்தினார்கள். அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.64-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த நான்கு வருடங்களில் ரூ.30.50 உயர்ந்திருக்கிறது. ஆனால், பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை” என்று கோபப்படுகிறார்கள் பேருந்து உரிமையாளர்கள்.
ஒரு பேருந்துக்கே இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்துக்கும் எவ்வளவு கட்டணம் வசூலித்து மக்களை சுரண்டுகிறார்கள் என்று வேதனையையும் பகிர்ந்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒரு மாதத்துக்கு சுமார் ரூ.1,400 கோடி ரூபாய் வசூலாவதாக நகாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.