பொழுதுபோக்கு
இந்தியன் 2 தோல்வி: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; மனம் திறந்த ஷங்கர்!

இந்தியன் 2 தோல்வி: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; மனம் திறந்த ஷங்கர்!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் 2-ம் பாகம் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தில் சேனாபதி கேரக்டரில் நடித்து அசத்திய கமல்ஹாசனே இந்த படத்திலும் அதே கேரக்டரில் நடித்திருந்த நிலையில், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல்ப்ரீத் சிங், ஆகியோர் நடிக்க வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், வசூலில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டின் பெரிய தோல்விப்படமாக மாறியது. இது குறித்து இயக்குனர் ஷங்கர் எந்த தகவலும் கூறாத நிலையில், அவர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம்சேஞ்சர் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.இதனிடையே தற்போது இந்தியன் 2 படம் குறித்து விகடனிடம் பேசியுளள் ஷங்கர்,“ஒரு நல்ல சிந்தனையை சொல்ல முயற்சித்தேன். அந்த வகையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ‘வீடு சுத்தமாக இருந்தால் தேசம் சுத்தமாகும்’ என்பது அற்புதமான அவசியமான சிந்தனை. நடைமுறையில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்ற கேள்வி இருந்தாலும், அது இன்றைக்கு முக்கியமானது.“தெலுங்கானாவில் உள்ள மாநகராட்சி பெண் பொறியாளர் ஒருவர் தனது கணவர் லஞ்சம் வசூலிப்பது வீடியோவில் சிக்கியபோது, அதை ‘இந்தியன் 2’ படத்தின் தாக்கம் என்று அழைத்தனர். நாம் நினைத்தது நடக்கிறது என்ற மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன், தன்னுடன் சென்ற பெண்ணிடம், ஆட்டோ டிரைவர் ஒருவர் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இதையறிந்த மகன், தந்தையை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார். இப்படிப்பட்ட தகவல்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கு இப்படியொரு விமர்சனம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இதில் இருந்து நான் நகர்ந்துவிட்டேன், இப்போது நான் என் வேலையில் கவனம் செலுத்துகிறேன். இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாக, இந்தியன் 3 படத்தை ஒடிடிதளத்தில் வெளியிடுவதாக தகவல் வெளியானது குறித்த கேள்விக்கு, வதந்திகளை நம்ப வேண்டாம், படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை ஷங்கர் உறுதிப்படுத்தினார்.