இந்தியா
பெண் அமைச்சர் குறித்து அவதூறு கருத்து.. பாஜக நிர்வாகி சி.டி.ரவி அதிரடி கைது!

பெண் அமைச்சர் குறித்து அவதூறு கருத்து.. பாஜக நிர்வாகி சி.டி.ரவி அதிரடி கைது!
கர்நாடகா மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்துவருபவர் லட்சுமி ஹெப்பால்கர். அதேபோல், கர்நாடகா சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக பாஜக நிர்வாகி சி.டி. ரவி இருந்து வருகிறார்.
அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக நிர்வாகி சி.டி. ரவி கர்நாடகாவின் சட்டமன்ற வளாகத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, பி.என்.எஸ். சட்டப்பிரிவுகள் 75 மற்றும் 79 ஆகியவற்றின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில், சட்டமேதை அம்பேத்கர் குறித்து பேசிய கருத்துகள் இந்தியாவில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின.
நாடாளுமன்றம் மட்டுமின்றி, நாட்டில் பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளும் தங்கள் மாநிலங்களில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.
கர்நாடகா சட்டமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா, சட்டமேதை அம்பேத்கர் குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், தங்கள் இருக்கைகளில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்துவிட்டு, வெளிநடப்பு செய்தனர்.
அப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை மேலவை உறுப்பினரான பாஜக சி.டி.ரவி அவதூறாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், சபாநாயகர் பசவராஜ் ஹொரட்டியிடம் புகார் கூறினார். அப்போது சி.டி.ரவி அந்தப் புகார் பொய்யானது என்று தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார் கூறி உடனடியாக சி.டி.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பிறகு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், சி.டி ரவி சட்டமன்றத்தின் முதல் தளத்திற்குள் நுழைந்து, தன்னை நோக்கி கண்ணியம் அற்ற சொற்களை கொண்டு பேசினார் என்றும், ஆபாசமான செய்கைகளை செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸார் பாஜக கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவியை கர்நாடகா சட்டமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
பெண் அமைச்சரை அவதூறாக பேசிய விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. சி.டி. ரவி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.